பசவராஜ்பொம்மை பிரசாரம் திடீர் ரத்து
வருணா தொகுதியில் பசவராஜ்பொம்மை பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது.;
மைசூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலில் சிறப்பு நட்சத்திர தொகுதியாக மைசூரு மாவட்டம் வருணா தொகுதி மாறியுள்ளது என்றால் மிகையல்ல. இங்கு காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா போட்டியிடுகிறார். இது தான் எனது கடைசி தேர்தல் என்ற அறிவிப்புடன் வெற்றியை அறுவடை செய்ய அவர் முனைப்பு காட்டி வருகிறார். அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் அங்கு லிங்காயத் சமுதாய தலைவரும், மந்திரியுமான வி.சோமண்ணாவை பா.ஜனதா களமிறக்கியுள்ளது. இதனால் அந்த தொகுதியில் நாளுக்குநாள் பரபரப்பு எகிறி வருகிறது. ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்த போது நண்பர்களாக இருந்த சித்தராமையாவும், வி.சோமண்ணாவும் இன்று தேர்தல் களத்தில் எதிரெதிர் துருவங்களாக மல்யுத்தம் செய்கிறார்கள்.
இந்த நிலையில் சோமண்ணாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை வருணா தொகுதிக்கு நேற்று செல்ல திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென்று வருணா தொகுதி பிரசார பயணத்தை பசவராஜ்பொம்மை ரத்துசெய்துள்ளார். இது அரசியல் அரங்கில் பல விவாதங்களை எழுப்பிய நிலையில் பசவராஜ் பொம்மை பயணம் ரத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது. அதாவது, வருணா தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரசாரம் செய்ய உள்ளார். இதனால் பசவராஜ்பொம்மை வருணா தொகுதியில் நேற்று பிரசாரம் செய்ய இருந்த திட்டத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது.