உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் பா.ஜனதா வியூகத்தை உடைத்து ஜெகதீஷ் ஷெட்டர் 4-வது வெற்றியை ருசிப்பாரா?

உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் பா.ஜனதா வியூகத்தை உடைத்து ஜெகதீஷ் ஷெட்டர் 4-வது வெற்றியை ருசிப்பாரா என்பது பற்றி இங்கு காண்போம்.

Update: 2023-05-01 22:04 GMT

பெங்களூரு:

வருகிற சட்டசபை தேர்தலில் கவனத்தை ஈர்த்துள்ள தொகுதிகளில் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் வீரசைவ-லிங்காயத் மக்கள் 70 ஆயிரம் பேர், ஆதிதிராவிட மக்கள் 40 ஆயிரம் பேர், பிற்படுத்தப்பட்ட மக்கள் 40 ஆயிரம் பேர், முஸ்லிம் மக்கள் 33 ஆயிரம் பேர், கிறிஸ்தவ மக்கள் 22 ஆயிரம் பேர், ஜெயின் உள்பட பிற மதங்களை சேர்ந்தவர்கள் 25 ஆயிரம் பேர் உள்ளனர். கர்நாடகத்தின் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். மாநிலத்தில் பா.ஜனதா மூத்த தலைவராக இருந்த இவர் 5 முறை எம்.எல்.ஏ.வாக ஆகியுள்ளார். மேலும் தொடர்ந்து 3 முறை உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் பா.ஜனதா சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் வருகிற சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா சார்பில் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் டிக்கெட் கேட்டு வந்தார். ஆனால், அவருக்கு பா.ஜனதா மேலிடம் டிக்கெட் வழங்க மறுத்துவிட்டது. அவருக்கு பதில் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் மகேஷ் தெங்கினகாய் என்பவருக்கு பா.ஜனதா டிக்கெட் வழங்கியது. இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். மேலும், அவரை சமாதானப்படுத்த கர்நாடக பா.ஜனதா மற்றும் மேலிட தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால், சமாதானம் அடையாத ஜெகதீஷ் ஷெட்டர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், பா.ஜனதாவில் இருந்து விலகிய அவர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரசில் தன்னை இணைத்து கொண்டார். இது கர்நாடக பா.ஜனதாவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வடகர்நாடகத்தில் செல்வாக்கு மிகுந்த தலைவராக பார்க்கப்படும் ஜெகதீஷ் ஷெட்டர் கட்சியில் இருந்து விலகியது, அங்கு அக்கட்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் கர்நாடகத்தில் உள்ள பெரும்பான்மை சமூகமான லிங்காயத்தின் பலம் வாய்ந்த தலைவராக உள்ள ஜெகதீஷ் ஷெட்டர், வடகர்நாடகத்தில் 10-12 தொகுதிகளில் செல்வாக்கு மிகுந்தவராக உள்ளார்.

காங்கிரசில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டருக்கு, அக்கட்சி உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்கி உள்ளது. இது பா.ஜனதாவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் பா.ஜனதா சார்பில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஜெகதீஷ் ஷெட்டர், இந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ெவற்றி பெற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால் அவரை உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் தோற்கடிக்க பா.ஜனதாவினர் கங்கணம் கட்டிக் கொண்டு வருகிறார்கள். மேலும் ஜெகதீஷ் ஷெட்டரை தோற்கடிக்கும் பொறுப்பு எடியூரப்பாவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் சித்தலிங்கேஷ் கவுடா போட்டியிடுகிறார்.

கடந்த 3 சட்டசபை தேர்தல்களில் எளிதில் வெற்றி அடைந்த ஜெகதீஷ் ஷெட்டருக்கு இந்த முறை வெற்றி பெறுவது எளிதாக இருக்காது என்றே கூறப்படுகிறது. 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் சரியாக வளர்ச்சி பணிகளை செய்யவில்லை என்று ஜெகதீஷ் ஷெட்டர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன், எம்.எல்.ஏ., மந்திரி, எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர், முதல்-மந்திரி என்று பல்வேறு பொறுப்புகள் ஏற்றபோதும் சொந்த தொகுதிக்கு ஏராளமான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள அவர் தவறிவிட்டார் என்ற பேச்சும் அங்கு நிலவுகிறது. பா.ஜனதாவினர் அவரை வீழ்த்த வியூகம் வகுத்தாலும், அதற்கு ஜெகதீஷ் ஷெட்டரும் பயப்படவில்லை. தனது குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் உதவியுடன் வீடு, வீடாக சென்று தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இந்த பிரசாரத்தின்போது அவர் தொகுதி மேம்பாட்டுக்காக மேற்கொண்ட பணிகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வருகிறார். இதனால், உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இருப்பினும் மற்ற வேட்பாளர்களை வீழ்த்தி ஜெகதீஷ் ஷெட்டர் 4-வது முறையாக வெற்றியை ருசிப்பாரா? என்பது தேர்தல் முடிவு அன்று தெரிந்துவிடும்.

Tags:    

மேலும் செய்திகள்