லிங்காயத், ஒக்கலிகருக்கான இட ஒதுக்கீடு உயர்வை காங்கிரசார் ரத்து செய்து விடுவார்கள்; உள்துறை மந்திரி அமித்ஷா பேச்சு

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் லிங்காயத், ஒக்கலிகர் சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு உயர்வை ரத்து செய்து விடுவார்கள் என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

Update: 2023-05-01 22:00 GMT

பெங்களூரு:

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் லிங்காயத், ஒக்கலிகர் சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு உயர்வை ரத்து செய்து விடுவார்கள் என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

ஆதரிக்க வேண்டும்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். உள்துறை மந்திரி அமித்ஷா கர்நாடகத்திலேயே தங்கி மூலை முடுக்கெல்லாம் சுற்றி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் அமித்ஷா நேற்று துமகூரு மாவட்டம் குப்பி தொகுதியில் பிரசாரம் செய்தார். அவர் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக வந்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். இதில் கலந்து கொண்ட பா.ஜனதா தொண்டர்கள் கட்சி கொடியுடன் வந்து 'மோடி வாழ்க, அமித்ஷா வாழ்க...' என்று முழக்கமிட்டனர். அப்போது அமித்ஷா பேசியதாவது:-

இந்த பகுதி மக்கள் பா.ஜனதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் இரட்டை என்ஜின் அரசு அமைவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். கர்நாடகத்தில் ஏராளமான வளர்ச்சி பணிகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எடியூரப்பா ஆகியோர் செய்துள்ளனர். கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளோம்.

ரத்து செய்து விடுவார்கள்

அதை ஒக்கலிகர், லிங்காயத் சமூகங்களுக்கு உயர்த்தியுள்ளோம். தலித், பழங்குடியின சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டையும் அதிகரித்துள்ளோம். ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், தற்போது உயர்த்தப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவார்கள். முஸ்லிம்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீட்டை வழங்குவார்கள். முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை நீங்கள் விரும்புகிறீர்களா?. இந்த இரட்டை என்ஜின் அரசு மீண்டும் அமைந்தால் அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமராவார்.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

அதைத்தொடர்ந்து ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார். அங்கும் அவர் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக வந்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்