பசவனகுடியில் ரவிசுப்பிரமணியாவுக்கு 4-வது வெற்றி கிடைக்குமா?

பசவனகுடியில் ரவிசுப்பிரமணியாவுக்கு நான்காவது வெற்றி கிடைக்குமா என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

Update: 2023-05-01 21:53 GMT

பெங்களூரு:

பெங்களூருவில், பழம்பெருமை வாய்ந்த சட்டசபை தொகுதிகளில் பசவனகுடியும் ஒன்று. 1957-ம் ஆண்டு உதயமான பசவனகுடி சட்டசபை தொகுதியில் 14 பொதுத்தேர்தல்கள், ஒரு இடைத்தேர்தல் என்று மொத்தம் 15 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. தொடக்கத்தில் காங்கிரஸ், இடைக்காலத்தில் ஜனதாபரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் வாகை சூடினர். பின்னர், பா.ஜனதா வேட்பாளர்கள் பசவனகுடி தொகுதியில் வெற்றி பெற தொடங்கினர்.

கடந்த 1989-ம் ஆண்டு ஜனதா கட்சி சார்பில் பசவனகுடியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராமகிருஷ்ணஹெக்டே கர்நாடக முதல்-மந்திரியாக பொறுப்பு வகித்தார். பெங்களூருவில் 28 சட்டசபை தொகுதிகள் இருந்தாலும் கூட முதல்-மந்திரியை கொடுத்த ஒரே தொகுதி என்ற பெருமை பசவனகுடியையே சேரும்.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி, பசவனகுடி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்துக்கு 29 ஆயிரத்து 303 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 1 லட்சத்து 16 ஆயிரத்து 863 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 12 ஆயிரத்து 438 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலினத்தினர் 2 பேரும் அடங்குவர். பசவனகுடி, அனுமந்தநகர், ஸ்ரீநகர், கிரிநகர், கத்ரிகுப்பே மற்றும் வித்யாபீடா எனும் 6 வார்டுகளை இந்த தொகுதி உள்ளடக்கி உள்ளது. பசவனகுடி தொகுதியில் குடிநீர் பிரச்சினை, போக்குவரத்து நெரிசல், சாலைகளில் உருவாகும் பள்ளங்கள், நடைபாதைகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட சில பிரச்சினைகள் தொடர்ந்து நிலவி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடந்த 2008, 2013 மற்றும் 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த ரவிசுப்பிரமணியா 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். குறிப்பாக 1994-ம் முதல் 2018-ம் ஆண்டு வரை நடந்த 6 சட்டசபை தேர்தலில் ஒரு தேர்தலை தவிர்த்து 5 தேர்தல்களில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனால் பா.ஜனதா கோட்டையாக பசவனகுடி சட்டசபை தொகுதி விளங்குகிறது. வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ.வான ரவி சுப்பிரமணியா வேட்பாளராக களமிறங்குகிறார். காங்கிரஸ் சார்பில் யூ.பி.வெங்கடேசும், ஜனதாதளம்(எஸ்) சார்பில் அரமனே சங்கரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

பா.ஜனதாவின் தொடர் வெற்றியை தடுக்க காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. தொடக்க காலத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதாபரிவார் அமைப்புக்கு பசவனகுடி மக்கள் கொடுத்த வரவேற்பை மீண்டும் பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியினரும், ஜனதாதளம்(எஸ்) தேசிய தலைவர் தேவேகவுடா, குமாரசாமி ஆகியோரும் காய் நகர்த்தி வருகிறார்கள். இதற்காக அக்கட்சியினர் தீவிர களப்பணி ஆற்றுகிறார்கள். அதே நேரத்தில் 4-வது வெற்றியை பெற பா.ஜனதா கட்சியின் ரவிசுப்பிரமணியாவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு 4-வது வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்