காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி

சித்தராமையாவை பார்க்க ஹெலிபேடு தளத்திற்குள் சென்ற காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். மேலும் சூறாவளி காற்றில் கூட்ட மேடை, பந்தல் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-01 21:46 GMT

பெங்களூரு:

சித்தராமையாவை பார்க்க ஹெலிபேடு தளத்திற்குள் சென்ற காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். மேலும் சூறாவளி காற்றில் கூட்ட மேடை, பந்தல் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தடுப்பு வேலியை தள்ளிக்கொண்டு....

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், கதக் மாவட்டம் சிரகட்டி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுஜாதா தொட்ட மணியை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நேற்று மதியம் சித்தராமையா ஹெலிகாப்டரில் சென்றார்.

இதற்காக சிரகட்டி அருகே பெலஹட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடு தளத்தில் சித்தராமையா சென்ற ஹெலிகாப்டர் தரை இறங்கியது. அப்போது அங்கு அமைத்திருந்த தடுப்பு வேலியை தள்ளிக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளே ஓடி சென்று சித்தராமையாவை ஹெலிகாப்டரில் இருந்து இறங்க விடாமல் முற்றுகையிட்டனர்.

போலீஸ் தடியடி

இதையடுத்து, காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனால் தொண்டர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

இதற்கிடையில், பிரசாரத்தை முடித்து சித்தராமையா அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். காங்கிரஸ் தொண்டர்கள், பிரசாரத்திற்காக அமைக்கப்பட்டு இருந்த மேடை முன்பாக நின்று கொண்டிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் சூறாவளி காற்று வீசியது.

மேடை, பந்தல் சரிந்தது

இதனால் மேடை சரிந்து, சாமியானா பந்தலும் காங்கிரஸ் தொண்டர்கள் மீது விழுந்து அமுக்கியது. இதில், சில தொண்டர்கள் லேசான காயம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள், தொண்டர்களை மீட்டனர். இந்த சம்பவங்களால் பெலகட்டி கிராமத்தில்நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்