ஒடிசா: வயதானவரை கட்டிவைத்து அடித்த மகன்,மருமகள்
குடும்ப தகராறில் வயதானவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து அவரது மகன் மற்றும் மருமகள் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புவனேஸ்வர்,
ஒடிசாவில் உள்ள கோராபுட் மாவட்டத்தை சேரந்தவர் குர்ஷா மணியக்கா. இவருக்கும் அவரது மகனுக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது அவர் தனது மகன் வீட்டின் மேற்கூரையை உடைத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள் அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.
மணிக்காவின் மகன், மருமகள் சேர்ந்து அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, உடனடியாக அவரது உடலை எரித்துள்ளனர்.
இந்த நிலையில், மணிக்காவை அவரது குடும்பத்தினர் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து, தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.