மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய 8 ஆண்டுகளாக பாடுபட்டோம் - பிரதமர் மோடி அறிக்கை
மக்களின் விருப்பங்களை பூர்த்திசெய்ய கடந்த 8 ஆண்டுகளாக பாடுபட்டுள்ளோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
மோடி அரசு நேற்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்தது. இதையொட்டி, பிரதமர் மோடி, தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதில்தான் கடந்த 8 ஆண்டுகளை செலவிட்டுள்ளோம். சேவை, நல்ல நிர்வாகம், ஏழைகள் நலன் ஆகியவற்றுக்காக பாடுபட தொடர்ந்து மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
இதுதொடர்பாக எனது பெயரிலான 'நமோ' செயலியில் 8 ஆண்டுகால வளர்ச்சி பயணம் பற்றிய தொகுப்பு இடம்பெற்றுள்ளது. வினாடி வினா, வார்த்தை தேடல் என புதுமையான வழிகளில் அவற்றை காணலாம். இளம் தலைமுறையினர் அதை பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, மோடி அரசின் 8 ஆண்டு நிறைவு குறித்து பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நாங்கள் அரசியலில் இருப்பதால், ஒவ்வொருவரையும் அரவணைத்து செல்ல முயன்று வருகிறோம். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
'வலிமையான நாடு, ஒரே நாடு' என்ற கொள்கை அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். எல்லோருக்கும் சமபங்கு இருக்கும். யாரையும் ஒதுக்க மாட்டோம்.
8-ம் ஆண்டு நிறைவையொட்டி, அடுத்த 10 நாட்களுக்கு மொத்தம் 75 மணி நேரம் ஒவ்வொரு பா.ஜனதா செயல்வீரரும் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச்சொல்வார்கள்.
காசியில் உள்ள ஞானவாபி மசூதி விவகாரத்தை பொறுத்தவரை, அரசியல் சட்டமும், கோர்ட்டும் அப்பிரச்சினைக்கு தீர்வு காணும். அதை பா.ஜனதா அப்படியே பின்பற்றும்.
காசி, மதுராவில் இருந்த கோவில்களை மீட்பது, பா.ஜனதாவின் செயல்திட்டத்தில் இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். ராமஜென்மபூமியை தவிர, வேறு எதற்கும் நாங்கள் தீர்மானம் நிறைவேற்றியது இல்லை.
உத்தரகாண்ட் மாநில பா.ஜனதா அரசு, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி ஆராய குழு அமைத்திருப்பது உண்மைதான். அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும், அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும், யாரையும் 'தாஜா' செய்யக்கூடாது என்பதுதான் எங்கள் அடிப்படை கொள்கை. அதன்படிதான் செயல்பட்டு வருகிறோம் என்று அவர் கூறினார்.