விமானத்தில் கடத்திய ரூ.11 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்; நைஜீரியாவை சேர்ந்தவர் கைது

பெங்களூருவில் விமானத்தில் கடத்திய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நைஜீரியாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-16 20:57 GMT

பெங்களூரு:

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள். ஆனால் எந்த பயணியிடமும் போதைப்பொருட்கள் சிக்கவில்லை. இந்த நிலையில், எத்தியோப்பியாவில் இருந்து வந்திறங்கிய விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் மட்டும் சந்தேகம் எழுந்தது. அவரிடமும், அவருடைய உடைமைகளையும் போலீசார் சோதனை செய்தார்கள். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

பின்னர் நவீன கருவி மூலமாக உடல் பரிசோதனை செய்தபோது, அந்த நபரின் வயிற்றுக்குள் மாத்திரைகள் இருப்பதும், அதற்குள் போதைப்பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தார்கள். அவர் நைஜீரியாவை சேர்ந்தவர் என்பதும், எத்தியோப்பியாவில் இருந்து பெங்களூருவுக்கு கொகைன் போதைப்பொருட்களை மாத்திரை வடிவில் வயிற்றுக்குள் விழுங்கி கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரது வயிற்றுக்குள் இருந்த ரூ.11 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து விமான நிலைய போலீசார், நைஜீரியா வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்