பெங்களூருவில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

பெங்களூருவில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-09-05 16:59 GMT

மண்டியா:

வெள்ளப்பெருக்கு

மண்டியா மாவட்டம் மலவள்ளி டி.கே.ஹள்ளியில் பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக நீரேற்று நிலையம் (பம்பிங் ஸ்டேஷன்) உள்ளது. அங்கு பெய்த கனமழையால் அந்த நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த நிலையல் செயல்படாமல் முடங்கியுள்ளது. அங்குள்ள வெள்ளத்தை அகற்றும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த நீரேற்று நிலையத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

டி.கே.ஹள்ளி நீரேற்று நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். இதன் அருகில் பீரேஸ்வரா ஆறு ஓடுகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக அந்த ஆற்றில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த ஆற்றில் மிக கனமழை பெய்தாலும் எந்த அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பது குறித்து குறியீடு இடப்பட்டுள்ளது. ஆனால் அந்த குறியீட்டை தாண்டி 1½ மீட்டர் உயரத்திற்கு நீர் மேலே வந்து நீரேற்று நிலையத்தில் வெள்ளம் புகுந்துள்ளது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

தடையின்றி நீர் வினியோகம்

இந்த நீரேற்று நிலையத்தில் தினமும் 1,450 கோடி லிட்டர் நீரை எடுத்து அனுப்பும் திறன் கொண்ட எந்திரங்கள் உள்ளன. இவற்றில் 2 எந்திரங்கள் நீர் நிரம்பி சேதம் அடைந்துள்ளன. தினமும் 500 கோடி லிட்டர் நீரை பெங்களூருவுக்கு அனுப்பும் எந்திரங்கள் தொடர்ந்து எந்த பிரச்சினையும் இன்றி செயல்பட்டு வருகின்றன. அதனால் பெங்களூரு நகருக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் பெரிய அளவில் பிரச்சினை இருக்காது. அதனால் பெங்களூரு மக்கள் பயப்பட தேவை இல்லை. ஆழ்குழாய் கிணறுகளில் கிடைக்கும் நீரை கொண்டு தடையின்றி நீர் வினியோகம் செய்யப்படும்.

தேங்கியுள்ள நீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை (இன்று) காலைக்குள் தேங்கிய நீர் முழுவதும் அகற்றப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கிறோம். நீரை முழுமையாக அகற்றிய பிறகு சேதம் அடைந்த எந்திரங்களை சரிசெய்யும் பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் 2 நாட்களில் முடிக்கப்படும். அதன் பிறகு இந்த நீரேற்று நிலையம் வழக்கம் போல் செயல்பட தொடங்கும். இந்த வெள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கத்தில் இந்த நீரேற்று நிலையத்தை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்கப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்