உன்சூரில் இரட்டை கொலை: வாலிபர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு
உன்சூரில் நடந்த இரட்டை கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மைசூரு:
உன்சூரில் நடந்த இரட்டை கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இரட்டை கொலை
மைசூரு மாவட்டம் உன்சூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 70). இவர் அப்பகுதியில் உள்ள மரக்கடையில் வேலை பார்த்து வந்தார். அவர் கடையிலேயே தங்கி இருந்தார். அவருடன் அதேப்பகுதியை சேர்ந்த சண்முகம் (60) என்பவரும் தங்கி இருந்தார். இந்தநிலையில், கடந்த 21-ந் தேதி இரவு கடையில் புகுந்த மர்மநபர்கள் வெங்கடேஷ், சண்முகத்தை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். மறுநாள் காலை கடைக்கு வேலைக்கு வந்த ஊழியர்கள் வெங்கடேஷ், சண்முகம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்்து அதிர்ச்சி அடைந்தனர்.
வாலிபர் கைது
இதுகுறித்து அவர்கள் உன்சூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உன்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே அப்பகுதி மற்றும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், 3 பேர் கடையின் சுவரில் ஏறி குதித்து வெங்கடேஷ், சண்முகத்திடம் தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி சென்றது பதிவாகி இருந்தது. இதுகுறித்து உன்சூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் உன்சூர் டவுன் சரஸ்வதிபுரத்தை சேர்ந்தவர் அபிஷேக் (வயது23) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
2 பேருக்கு வலைவீச்சு
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், செலவுக்கு பணம் இல்லாததால் அபிஷேக், தனது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து மரக்கடையில் புகுந்து திருட முயன்றுள்ளார். அப்போது கடையில் இருந்த வெங்கடேஷ், சண்முகம் இவர்களை பார்த்துள்ளனர். இதனால் மதுபோதையில் இருந்த அவர்கள் 2 பேரையும் கொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அபிஷேக் மீது உன்சூர் போலீஸ் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி, மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன. இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.