காவிரி பிரச்சினைக்கு காரணமான டி.கே.சிவக்குமார் பதவி விலக வேண்டும்-கே.எஸ்.ஈசுவரப்பா பேட்டி

காவிரி பிரச்சினைக்கு காரணமான டி.கே.சிவக்குமார் பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதா முன்னாள் மந்திரி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-09-22 21:44 GMT

சிவமொக்கா:-

கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான கே.எஸ்.ஈசுவரப்பா நேற்று சிவமொக்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்

கூறியதாவது:-

காவிரி நதி நீர் காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் சொந்தமானது அல்ல. இது கர்நாடக மக்களின் சொத்து. இந்தியா கூட்டணியை திருப்திப்படுத்தவும், சோனியா காந்தியை திருப்திப்படுத்தவும் யாரையும் கேட்காமல் தமிழகத்திற்கு காவிரி நீரை துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திறந்துவிட்டுள்ளார். தமிழகத்திற்கு தண்ணீரை திறப்பதற்கு முன் அவர் யாரிடமும் கருத்து கேட்கவில்லை. தண்ணீர் விடுவதற்கு முன்பு அனைத்துக்கட்சி கூட்டம் அல்லது நீர்ப்பாசன அதிகாரிகள், சட்ட நிபுணர்கள், எம்.பி.க்களுடன் ஆலோசித்து இருக்க வேண்டும். காவிரி பிரச்சினை இவ்வளவு பெரிதாக உருவெடுக்க காரணம் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தான். எனவே முதல்-மந்திரி சித்தராமையா, டி.கே.சிவக்குமாரை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும்.

தற்போது நமது விவசாயிகள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் எப்போது வெகுண்டு எழப்போகிறார்கள் என தெரியவில்லை. காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் செய்த தவறை மறைக்க பிரதமர் தலையிட வேண்டும் என்றும் அக்கட்சியினர் கூறி வருகிறார்கள். தண்ணீர் திறப்பதற்கு முன்பு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தால் இந்த நிலை நமது மாநிலத்துக்கு வந்து இருக்காது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கர்நாடக மக்களுக்கு அநீதி இழைத்துவிட்டது. முதல்-மந்திரி சித்தராமையா, அணைகளின் நீர் இருப்பை நேரில் சென்று பார்வையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்