யாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்பது முக்கியமல்ல; டி.கே.சிவக்குமார் பேட்டி

முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் யாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்பது முக்கியமல்ல என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

Update: 2023-05-15 20:55 GMT

பெங்களூரு:

முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் யாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்பது முக்கியமல்ல என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரஸ் வெற்றி

எனக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்குமா? என்று எனக்கு தெரியாது. எனக்கு கொடுத்த பணியை நான் செய்து முடித்துள்ளேன். முதல்-மந்திரி யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை கட்சி மேலிடத்திற்கு வழங்கி ஒரு வரியில் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்துள்ளோம். நல்ல நாளில் காங்கிரஸ் அரசு அமைக்கப்படும். எனது தலைமையில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

முதல்-மந்திரி யார் என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முடிவு செய்வார். எனக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்பது முக்கியம் அல்ல.

மகிழ்ச்சி அளிக்கிறது

கர்நாடகத்தில் நடைபெற்ற இரட்டை என்ஜின் அரசு, ஊழல் அரசு, தவறான ஆட்சி நிர்வாகத்திற்கு எதிராக காங்கிரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. தேர்தலில் காங்கிரஸ் மேற்கொண்ட பிரசாரம், ஒற்றுமையாக பணியாற்றியதை நாடு முழுவதும் உள்ள கட்சிகளின் தலைவர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் நேரம் போதவில்லை. உள்ளூர் தலைவர்களின் ஒத்துழைப்பு இன்னும் அதிகமாக கிடைத்திருந்தால், இன்னும் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கும்.

ஆனால் தற்போது காங்கிரசுக்கு கிடைத்துள்ள வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு இன்று (நேற்று) பிறந்த நாள் என்பதால் ஏராளமானோர் வாழ்த்து கூற வருகிறார்கள். தனிப்பட்ட முறையில் என்னிடம் எண்ணிக்கை (எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு) இல்லை. 135 எம்.எல்.ஏ.க்களும் ஒரே குரலில் முதல்-மந்திரி யார் என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை கட்சி மேலிடத்திற்கு வழங்கியுள்ளனர். எனது எண்ணிக்கை என்பது 135 எம்.எல்.ஏ.க்களையும் உள்ளடக்கியது.

பகிரங்கப்படுத்த விரும்பவில்லை

காங்கிரஸ் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். முதல்-மந்திரி, மந்திரிகள் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். நான் தனி ஆள். இந்த தனி ஆள் தான் தைரியத்துடன் பெரும்பான்மையை உருவாக்குகிறார். அதை நான் நிரூபித்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை.

எதிர்காலத்தில் அதை பகிரங்கப்படுத்துவேன். தோற்கும்போது தைரியமான இதயத்துடன் இருக்க வேண்டும் என்றும், வெற்றி பரந்த இதயத்துடன் இருக்க வேண்டும் என்றும் மகாத்மா காந்தி கூறியுள்ளார். கூட்டணி ஆட்சியில் 15 எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு விலகி சென்றபோது, நான் ைதரியத்தை இழக்கவில்லை. தைரியத்துடன் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றேன்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்