கர்நாடக முதல்-மந்திரி யார்? - இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
கர்நாடக முதல்-மந்திரி யார் என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இன்று டெல்லி செல்கிறார்.
பெங்களூரு,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு வழங்கி ஒரே வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில் புதிய முதல்-மந்திரி யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க உள்ளது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவை ஆதரித்து கருத்து கூறி இருப்பதாகவும், அதனால் சித்தராமையா புதிய முதல்-மந்திரியாக அறிவிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, ஒக்கலிகர் சங்கம், டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அந்த சமூக மடாதிபதிகள் நிர்மலானந்தநாத சுவாமி, நஞ்சாவதூத சுவாமி மற்றும் லிங்காயத் மடாதிபதிகள் என 20 மடாதிபதிகள் பகிரங்கமாகவே டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பின்பேரில் சித்தராமையா நேற்று மதியம் 1 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மகன் யதீந்திரா மற்றும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்களும் சென்றுள்ளனர்.
அதுபோல் டி.கே.சிவக்குமாருக்கும் டெல்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் டெல்லி செல்வதாக கூறினார். அவர் இரவு 7.30 மணி அளவில் பெங்களூருவில் இருந்து விமானத்தில் டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் டெல்லி செல்லும் முடிவை திடீரென ரத்து செய்தார். சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று உறுதியாகி இருப்பதாகவும், இதனால் டி.கே.சிவக்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அதனாலேயே அவர் டெல்லி செல்வதை தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் முதல்-மந்திரி பதவி கேட்டு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என 2 பேரும் பிடிவாதமாக இருப்பதால் யாரை ஆட்சியில் அமர வைப்பது என்று முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது.
இதனால் முதல்-மந்திரி தேர்வில் இழுபறி நீடிக்கிறது. இருப்பினும் காங்கிரஸ் மேலிடம் புதிய முதல்-மந்திரியை அறிவித்து, பதவி ஏற்பு விழாவை வருகிற 18-ந் தேதி நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இன்று டெல்லி செல்கிறார். அடுத்த கர்நாடக முதல்-மந்திரி யார் என்பது குறித்து ஆலோசிக்க அவர் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.