அரசியல் சாசன படுகொலை தினம்; மத்திய அரசின் முடிவுக்கு எதிரான பொதுநல மனு கோர்ட்டில் தள்ளுபடி

அரசியல் சாசன படுகொலை தினம் தொடர்பான மத்திய அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

Update: 2024-07-26 16:19 GMT

புதுடெல்லி,

கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது இந்தியாவில் 'எமர்ஜென்சி' அமல்படுத்தப்பட்டது. இதனை இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள் என பல்வேறு எதிர்கட்சியினர் குறிப்பிடுகின்றனர்.

இந்தியாவில் 'எமர்ஜென்சி' அமல்படுத்தப்பட்டதை குறிப்பிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து வக்கீல் சமீர் மாலிக் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், அரசியலமைப்பு சாசனம் 352-ம் பிரிவின்படி அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியை 'அரசியல் சாசன படுகொலை' என வர்ணிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசின் முடிவு எமர்ஜென்சி அறிவிப்புக்கு எதிரானது அல்ல என்றும், மாறாக அதன் பின்னர் நடந்த அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அரசியலமைப்பு விதிமீறல்களுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டதோடு, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Full View

Tags:    

மேலும் செய்திகள்