சீன தொழிலாளர் விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

குற்றப்பத்திரிகையில் கார்த்தி சிதம்பரம், அவரது நெருங்கிய உதவியாளர் பாஸ்கரராமன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

Update: 2024-10-17 12:28 GMT

புதுடெல்லி:

பஞ்சாப் மாநிலத்தில் டி.எஸ்.பி.எல். நிறுவனத்தின் அனல் மின்நிலைய திட்டப் பணிகளை மேற்கொள்ள சீன நிறுவனமான ஷாங்டாங் எலக்ட்ரிக் பவர் கன்ஸ்ட்ரக்சன் கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு அவுட்சோர்சிங் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இத்திட்டம் தொடர்பாக சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் சிலருக்கு எதிராக சி.பி.ஐ. கடந்த 2022-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

2011-ம் ஆண்டு அவரது தந்தை ப.சிதம்பரம் மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது, சீன தொழிலாளர்களுக்கு விசா வழங்குவதற்கு லஞ்சம் பெற்றதாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், கார்த்தி சிதம்பரம், அவரது நெருங்கிய உதவியாளர் பாஸ்கரராமன் மற்றும் டி.எஸ்.பி.எல். நிறுவனத்தின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறினர். வைரல் மேத்தா, அனுப் அகர்வால், மன்சூர் சித்திக் மற்றும் சேத்தன் ஸ்ரீவஸ்தவா ஆகியோரின் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

"அனல் மின் நிலைய திட்டமானது, நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்கு பிறகும் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் டி.எஸ்.பி.எல். நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் நிலை உருவானது. எனவே, தாமதத்திற்கான அபராத நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக, அந்த நிறுவனம் சீனாவில் இருந்து மேலும் மேலும் தொழிலாளர்களையும் நிபுணர்களையும் கொண்டு வர முயற்சித்தது. உள்துறை அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்புக்கு மேல் திட்ட விசாக்கள் தேவைப்பட்டன.

இதனால் டி.எஸ்.பி.எல். நிர்வாகி ஒருவர் கார்த்தி சிதம்பரத்தை அவரது நெருங்கிய கூட்டாளி பாஸ்கரராமன் மூலம் அணுகியதாக முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. சீன நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட 263 திட்ட விசாக்களை மீண்டும் பயன்படுத்த அனுமதி வழங்குவதன் மூலம் உச்சவரம்பை மீறுவதற்காக பின்வாசல் வழியை அவர்கள் திறந்துள்ளனர்" என 2022ல் சி.பி.ஐ. தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்