'வயநாடு மக்கள் பிரியங்கா காந்தியை தேர்ந்தெடுக்க ஆர்வமாக உள்ளனர்' - கே.சி.வேணுகோபால்

வயநாடு மக்கள் பிரியங்கா காந்தியை தேர்ந்தெடுக்க ஆர்வமாக உள்ளனர் என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-18 03:57 GMT

திருவனந்தபுரம்,

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் ராகுல்காந்தி அபார வெற்றி பெற்றார்.

அதேவேளை, ராகுல் காந்தி ஏதேனும் ஒரு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து, வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்தது. இதன் மூலம் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், வயநாடு மக்கள் பிரியங்கா காந்தியை தேர்ந்தெடுக்க ஆர்வமாக உள்ளனர் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "வயநாடு என்பது காங்கிரஸ் கட்சியுடன் ஆழமான தொடர்பை கொண்டிருக்கும் சிறப்பான இடமாகும். வயநாடு மக்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் குரலாக பிரியங்கா காந்தியை தேர்ந்தெடுப்பதற்கு ஆர்வமாக உள்ளனர்" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்