அமலாக்க துறை கைதுக்கு எதிரான மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கெஜ்ரிவால் முடிவு

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவாலை அமலாக்க துறை கைது செய்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Update: 2024-04-09 12:03 GMT

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா மற்றும் மந்திரியாக இருந்த சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். எனினும், 6 மாத சிறைவாசத்திற்கு பின்னர், சஞ்சய் சிங் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில், டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு 9 முறை சம்மன் அனுப்பியபோதும், நேரில் ஆஜராகவில்லை. இது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்றது. எனினும், கெஜ்ரிவாலின் வழக்கை ஐகோர்ட்டு, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதேபோன்று, அமலாக்கத்துறை கைதுக்கு தடை விதிக்கவும் டெல்லி ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறை குழுவினர், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். 2 மணிநேர சோதனை மற்றும் விசாரணைக்கு பின்னர், அமலாக்க பிரிவு அதிகாரிகள் கெஜ்ரிவாலை அன்றிரவு கைது செய்து அழைத்து சென்றனர். அவரை ஏப்ரல் 15-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கெஜ்ரிவாலை அமலாக்க துறையின் காவலுக்கு அனுப்பியதற்கு எதிராக அவருடைய தரப்பில் இருந்து மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதுபற்றி இன்று விசாரணை மேற்கொண்ட நீதிபதி, கெஜ்ரிவால் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளார். டெல்லி மதுபான கொள்கை உருவாக்கத்தில் மனுதாரரான கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றி உள்ளார். அவருடைய பங்கு இருப்பது அமலாக்க துறை அளித்துள்ள சான்றாவணங்களில் இருந்து தெரிய வருகிறது என்றார்.

இந்த வழக்கை காணொலியில் விசாரித்திருக்கலாம் என்ற வாதம் நிராகரிக்கப்படுகிறது. எப்படி விசாரிக்கப்பட வேண்டும் என்று குற்றஞ்சாட்டப்பட்ட நபர் முடிவு செய்ய முடியாது. முதல்-மந்திரி என்பதற்காக தனி சலுகைகளை வழங்க முடியாது. மக்களவை தேர்தல் பற்றி கெஜ்ரிவாலுக்கு தெரியும்.

அதனால், தேர்தலை முன்னிட்டு அமலாக்க துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது என்று எடுத்து கொள்ள முடியாது என்றார். நீதிபதிகள் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். அரசியலுக்கு அல்ல என்று கூறினார். அவருடைய கைது சட்டவிரோதமல்ல என கூறி கெஜ்ரிவாலை அமலாக்க துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அரசியலமைப்பு சாசன அறம் பற்றியே கோர்ட்டுக்கு கவலை இருக்கிறது. அரசியல் அறம் பற்றி இல்லை. இந்த வழக்கு, கெஜ்ரிவாலுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலானது அல்ல. கெஜ்ரிவாலுக்கும், அமலாக்க துறைக்கும் இடையிலானது. அதனால், கோர்ட்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், நீதிபதி சுவர்ண காந்த சர்மா பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கெஜ்ரிவால் தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்