'சாதி' ஒரு தீவிர விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது - ப.சிதம்பரம்
21-ம் நூற்றாண்டில் இந்த குறுகிய அடையாளங்களுக்கு அப்பால் நாம் செல்ல வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13-ந்தேதி நடந்த பாதுகாப்பு மீறல் தொடர்பாக பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 146 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கரைப் போல மிமிக்ரி செய்து நடித்து காட்டியதை, ராகுல் காந்தி வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அது பேசுபொருளாக மாறியது.
இதையடுத்து, ஜெகதீப் தன்கரின் சமூகத்தைச் சேர்ந்த சிலர், எதிர்க்கட்சிகள் தங்கள் சமூகத்தையே அவமதித்தாக போராட்டதில் ஈடுபட்டது மேலும் சர்ச்சையானது. இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய ஜெகதீப் தன்கர், ''என்னை அவமதிப்பதைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது. ஆனால், நாட்டின் துணை ஜனாதிபதியை, விவசாய சமூகத்தை, எனது சமூகத்தை அவமதிப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது. இந்த அவையின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது'' என தெரிவித்தார்.
இந்நிலையில் 'சாதி' ஒரு தீவிர விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்டது என்பது ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"ஒரு முக்கியமான விஷயத்தின் மீது 'ஜாதி' ஒரு தீவிர விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்டது என்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு தனி நபரின் 'பிறந்த இடம்' தனி நபரை விமர்சிக்க ஒரு வாதமாக பயன்படுத்தப்படுவதும் ஏமாற்றம் அளிக்கிறது
மகாத்மா காந்தி அல்லது சர்தார் வல்லபாய் படேலின் ஜாதி அல்லது சி.எஃப் பிறந்த இடம் பற்றி யாராவது கேட்டால் என்னால் நினைவில் இல்லை. ஆண்ட்ரூஸ் அல்லது அன்னி பெசன்ட்
21-ம் நூற்றாண்டில் இந்த குறுகிய அடையாளங்களுக்கு அப்பால் சென்று, மனிதகுலத்தின் நெறிமுறைகள் மற்றும் மதிப்புகளை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா?"
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.