ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது ஏன்? அசாம் முதல் மந்திரி விளக்கம்

ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு நான் தான் உத்தரவிட்டேன் என்று அம்மாநில முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

Update: 2024-01-23 09:42 GMT

கவுகாத்தி,

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் தனது 2-வது கட்ட பாத யாத்திரையை தொடங்கியுள்ளார்.

மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை நாகலாந்து வழியாக தற்போது அசாம் வந்தடைந்துள்ளது. அசாமில் நியாய யாத்திரை நடத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று அங்குள்ள ஸ்ரீமந்த சங்கரதேவா பிறந்த இடமான படத்ராவா சத்ராவில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்தக் கோவிலுக்குச் செல்ல ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இது விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் இன்று அசாம் தலைநகர் கவுகாத்திக்குள் நுழைய முயன்றபோது ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் காவல்துறையினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ராகுல் காந்தி கவுகாத்தியின் பிரதான பகுதிகள் வழியாக யாத்திரையை மேற்கொள்ளாமல் பைபாஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பைபாஸ் சாலையில் செல்ல வேண்டும் என்று கூறி யாத்திரை தடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஏற்கெனவே ராகுல் காந்தி யாத்திரை திட்டமிட்ட பாதையில் நடக்கவில்லை என்று அசாம் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு நான் தான் உத்தரவிட்டேன் என்று அம்மாநில முதல் மந்திரி ஹிமந்த சர்மா தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார். இது தொடர்பாக ஹிமந்த பிஸ்வ சர்மா தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- மக்களை தூண்டிவிட்டதற்காக ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய நான் தான் அறிவுறுத்தினேன். அசாம் மிகவும் அமைதியான மாநிலம். இதுபோன்ற நக்சலைட்டு யுக்திகள் எல்லாம் எங்கள் மாநிலத்துடன் சம்பந்தம் இல்லாதது. விதிமுறைகளை பின்பற்றி நடக்காததால் அசாமில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்