சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் பக்தர்கள் சபரிமலை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.;
சபரிமலை,
மண்டல-மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சபரிமலையில் பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக முன்பதிவு செய்த பக்தர்கள் 18 மணிநேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சபரிமலையில், ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கூட்டத்தை கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கவும் கேரள அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஆகியவற்றை கேரள ஐகோர்ட்டு வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நிலக்கல்லில் நடைபெற்று வரும் உடனடி தரிசன முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களில் வரும் பக்தர்கள், சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல்,எரிமேலி, கன்னமாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் பக்தர்கள் சபரிமலை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
18-ம் படியேறி ஐயப்பனை தரிசிக்க நீண்ட நேரம் ஆவதால், பக்தர்கள் சிலர் சன்னிதானத்திற்கு செல்லாமலேயே மற்ற இடங்களில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.