சந்திரயான்-3 திட்டத்தின் 3 இலக்குகளில் 2 நிறைவு; எஞ்சிய ஒரு இலக்கு என்ன? - இஸ்ரோ புதிய டுவிட்

சந்திரயான்-3 விண்கலம் 3 இலக்குகளுடன் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.;

Update:2023-08-26 19:23 IST

பெங்களூரு,

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த புதன்கிழமை மாலை நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பின்னர், விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டது. நிலவின் தென் துருவத்தில் ஊர்ந்து செல்லும் பிரக்யான் ரோவர் தற்போது ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சந்திரயான் - 3 வெற்றியின் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அதேவேளை, நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிரங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்திரயான் - 3 திட்டம் 3 இலக்குகளுடன் செயல்படுத்தப்பட்டதாகவும் அதில் 2 இலக்குகள் நிறைவடைந்துவிட்டதாகவும், ஒரு இலக்கு எஞ்சியுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் இஸ்ரோ வெளியிட்டுள்ள பதிவில்,

சந்திரயான் 3 திட்டத்தின் 3 இலக்குகளில் 1-வது இலக்கான நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான, மென்மையான தரையிறங்குதல் நிறைவடைந்துவிட்டது.

2வது இலக்கான, நிலவின் மேற்பரப்பில் ரோவர் ஊர்ந்து செல்லும் இலக்கு நிறைவடைந்துவிட்டது.

நிலவின் தென் துருவத்தில் அறிவியல் ஆய்வுப்பணிகளை மேற்கொள்தல் 3வது இலக்கு. அந்த பணி நடைபெற்று வருகிறது. சந்திரயான் - 3 விண்கலம், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.



Tags:    

மேலும் செய்திகள்