வீர மரணம் அடைந்த அமைதிப்படையினருக்கு ஐ.நா. தலைமையகத்தில் நினைவுச்சின்னம்: பிரதமர் மோடி வரவேற்பு

வீர மரணம் அடைந்த அமைதிப்படையினரை கவுரவித்து ஐ.நா. தலைமையகத்தில் நினைவுச்சின்னம் ஏற்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் தீர்மானம், ஐ.நா. சபையில் நிறைவேறியது. இதைப் பிரதமர் மோடி வரவேற்றார்.

Update: 2023-06-16 00:20 GMT

Image Courtacy: PTI 

புதுடெல்லி,

ஐ.நா. அமைதிப்படை வீரர்கள், தங்கள் பணியின்போது தாக்குதல்களில் வீரமரணம் அடைந்ததைப் போற்றும் வகையில் ஐ.நா. தலைமையகத்தில் ஒரு நினைவுச்சின்னம் (நினைவுச்சுவர்) எழுப்ப வேண்டும் என்பது இந்தியாவின் கோரிக்கை.

இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில், இந்தியாவின் சார்பில் ஐ.நா.வுக்கான தூதர் ருசித்ரா காம்போஜ் ஒரு தீர்மானத்தை நேற்று முன்தினம் கொண்டு வந்து அறிமுகம் செய்தார்.

ஒருமனதாக நிறைவேறியது

இந்தியாவின் தீர்மானத்தை வங்காளதேசம், கனடா, சீனா, டென்மார்க், எகிப்து, பிரான்ஸ், இந்தோனேசியா, ஜோர்டான், நேபாளம், ருவணர்டா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாக கொண்டுவந்தன.

தீர்மானத்தை அறிமுகம் செய்து ஐ.நா.வுக்கான தூதர் ருசித்ரா காம்போஜ் பேசும்போது, "ஐ.நா. அமைதிகாக்கும்படையில் பணியாற்றி உயிர் நீத்தவர்களின் முக்கியத்துவத்துக்கு சான்றாக அமைகிற வகையில் ஐ.நா.வில் நினைவுச்சுவர் எழுப்ப வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், "இந்த நினைவுச்சின்னம், வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை மட்டுமல்ல, நமது முடிவுகளுக்கு நாம் கொடுத்த விலையை நினைவுபடுத்துவதாகவும் அமையும்" எனவும் குறிப்பிட்டார்.

இந்த தீர்மானத்துக்கு ஐ.நா.சபையின் சுமார் 190 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதன்காரணமாக அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

பிரதமர் மோடி வரவேற்பு

இதைப் பிரதமர் மோடி வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "ஐ.நா.அமைதிப்படையில் பணியாற்றி வீர மரணம் அடைந்தோருக்காக புதிதாக ஒரு நினைவுச்சுவர் எழுப்ப வேண்டும் என்று இந்தியா முன்மொழிந்து கொண்டு வந்த தீர்மானம், ஐ.நா. சபையில் நிறைவேறி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 190 நாடுகள் குரல் கொடுத்துள்ளன. அவர்களின் ஆதரவுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும் இந்தியாவின் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

இந்தியாவின் மகத்தான பங்களிப்பு

ஐ.நா. அமைதிப்படையில் இந்தியாவின் பங்களிப்பு மகத்தானது. ஐ.நா. அமைதிப்படைக்கு கூடுதல் பங்களிப்பு செய்து, 3-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் சார்பில் ஐ.நா. அமைதிப்படையில் 6 ஆயிரம் ராணுவத்தினரும், போலீசாரும் உள்ளனர்.

இந்தியாவின் அமைதிப்படை வீரர்கள் மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சைப்ரஸ், காங்கோ, லெபனான், மத்திய கிழக்கு மற்றும் மேற்கு சகாரா நாடுகளில் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்