புதிய தனியுரிமை கொள்கை: சிசிஐ விசாரணைக்கு எதிரான வாட்ஸ்அப், பேஸ்புக் மனுக்கள் தள்ளுபடி - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு!

சிசிஐ விசாரணைக்கு எதிரான வாட்ஸ்அப், பேஸ்புக் மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Update: 2022-08-25 08:15 GMT

புதுடெல்லி,

வாட்ஸ்அப், பேஸ்புக்கின் புதிய தனியுரிமை கொள்கையில் 2021 இல் கொண்டு வந்த திருத்தங்கள் பற்றி விசாரணையை தொடங்க இந்தியாவின் போட்டி ஆணையம் (சிசிஐ) முடிவு செய்தது.

இதனை எதிர்த்து வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் ஆகியவை மனு தாக்கல் செய்தன.

முன்னதாக, ஏப்ரல் 22, 2021 அன்று டெல்லி ஐகோர்ட்டின் ஒற்றை நீதிபதி பெஞ்ச், சிசிஐ உத்தரவை எதிர்த்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஜூலை 25, 2022 அன்று, நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு பதிலையும் கேட்க கால அவகாசம் அளித்து கோர்ட்டு தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் தரப்பில் கூறுகையில்;

வாட்ஸ்அப்பின் தனியுரிமைக் கொள்கையை சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் ஏற்கெனவே விசாரித்து வருகிறது. ஆகவே, சிசிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை. சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், சிசிஐ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதனை எதிர்த்து சிசிஐ தரப்பு ஏற்கெனவே அளித்த விளக்கத்தை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து சிசிஐ விசாரணைக்கு எதிரான வாட்ஸ்அப், பேஸ்புக் மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்