நிலவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் - மத அமைப்பின் தலைவர் பேச்சு
நிலவை இந்து நாடாக அறிவிக்க வேண்டுமென அனைத்திந்திய இந்து மகாசபா தேசிய தலைவர் தெரிவித்தார்.;
டேராடூன்,
சந்திரயான் - 3 விண்கலம் கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, கடந்த சனிக்கிழமை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்திற்கு சென்ற பிரதமர் மோடி விஞ்ஞானிகளை பாராட்டினார். மேலும், சந்திரயான் - 2 விண்கலம் நிலவில் மோதிய பகுதிக்கு திரங்கா என பெயர் வைத்த பிரதமர் மோடி, சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய பகுதிக்கு சிவசக்தி என பெயர் வைத்தார்.
இந்நிலையில், நிலவை இந்து நாடாக அறிவிக்க வேண்டுமென மத அமைப்பான அனைத்திந்திய இந்து மகாசபா தேசிய தலைவர் சக்ரபனி மகாராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
நிலவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இதற்காக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
சந்திரயான் - 3 விண்கலம் தரையிறங்கிய பகுதிக்கு சிவசக்தி என பெயர் வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி. நிலவில் இந்து நாடு அமைக்கப்பட்ட பின்னர் அதன் தலைநகராக சிவசக்தி பகுதி இருக்க வேண்டும். அப்போது தான் பயங்கரவாத மனநிலையுடன் பயங்கரவாதிகள் யாரும் அப்பகுதியை அடையமாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.