பெங்களூருவில் பீனியா மேம்பாலத்தை பலப்படுத்த முடிவு- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

பெங்களூருவில் பீனியா மேம்பாலத்தை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-09-09 21:16 GMT

பெங்களூரு: பெங்களூருவில் பீனியா மேம்பாலத்தை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

கால்வாய்கள் ஆய்வு

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது கர்நாடகத்தில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகளை விரைவாக முடிக்குமாறு பசவராஜ் பொம்மை கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்புக்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வரும் கால்வாய்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும். எங்கெங்கு கால்வாயை விரிவுபடுத்த வேண்டும் என்பது குறித்த விஷயங்கள் ஆய்வில் தெரியவரும். பெங்களூருவுக்கு வரும் சென்னை விரைவுச்சாலை, மும்பை விரைவுச்சாலை, ஐதராபாத் விரைவுச்சாலைகளுக்கு தொடர்பு ரோடுகள் அமைப்பது, நகரங்களில் செல்லும் சாலைகளின் இடைவெளியை குறைப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பெரிய வயர்கள்

இன்று (நேற்று) ஆலோசிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் விரைவாக நடைபெற வேண்டியவை ஆகும். இவற்றுக்கு உடனே ஒப்புதல் வழங்குவதாக நிதின் கட்கரி கூறியுள்ளார். பெங்களூருவில் அனைத்து வகையான போக்குவரத்தையும் ஒருங்கிணைத்து நிர்வகிக்க தனி ஆணையம் அமைக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து கட்டமைப்பு திட்டங்கள் விரைவாக மேற்கொள்ளப்படும். சிராடிகாட் நெடுஞ்சாலை திட்ட பணிகளை விரைவாக முடிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

பெங்களூரு குரகுன்டேபாளையா பீனியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பாதுகாப்பு கருதி தற்போது கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. அந்த மேம்பாலத்தை பலப்படுத்த பெரிய வயர்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு எந்த நிறுவனத்திற்கு பணி வழங்க வேண்டும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பதாக நிதின் கட்கரி கூறியுள்ளார். பெங்களூரு சேட்டிலைட் நகர வட்டச்சாலை திட்டத்திற்கு சில விலக்குகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதை ஏற்பதாக நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார். அந்த சாலையில் சிறிய கிராமங்களுக்கு கூட தொடர்பு வசதி ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்