கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடுவது குறித்து விரைவில் முடிவு; முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மைசூரு:
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பீகாா் மாநில அரசு சமீபத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டது. கா்நாடகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, ரூ.170 கோடி செலவில் மாநிலத்தில் சமூக-பொருளாதாரம் மற்றும் கல்வி அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக இருந்த காந்தராஜ் தலைமையிலான குழுவினர் சாதிவாரி மக்கள்தொகையை கணக்கெடுத்தனர்.
கர்நாடகத்தில் பல்வேறு சாதியினர் குறிப்பாக பெரும்பான்மை சாதிகளான லிங்காயத் மற்றும் ஒக்கலிகர்கள் இந்த சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அதனை வெளியிட மாநில அரசு தயங்கி வந்ததாக தெரிகிறது.
கடந்த கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது காந்தராஜ் ஆணையம் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை தாக்கல் செய்தது. அதனை ஏற்க குமாரசாமி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், கர்நாடகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை ெவளியிட வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநில பிற்படுத்தபட்டோர் ஆணைய தலைவர் ஜெயபிரகாஷ் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை நவம்பர் மாதம் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து ைமசூருவில் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு எனது தலைமையிலான ஆட்சியில் காந்தராஜ் தலைமையிலான ஆணையம் அமைத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கூட்டணி ஆட்சியில் அப்போதைய முதல்-மந்திரி குமாரசாமியிடம் காந்தராஜ் ஆணையம் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால் அதனை குமாரசாமி ஏற்கவில்லை. இப்போது பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் மாறிவிட்டார். ஆனாலும் காந்தராஜ் ஆணைய அறிக்கையை அப்படியே சமர்ப்பிக்கும்படி தெரிவித்துள்ளேன். நவம்பர் மாதம் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை தாக்கல் செய்யயப்படும் என்று அந்த ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதனை ெவளியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.
சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தற்போது கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் உள்ளது. அவர்கள் சமர்ப்பித்த பிறகு, மந்திரிசபை கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கப்படும். காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் சமுதாயத்தை பிளவுப்படுத்த முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். பிரதமர் மோடி கூறுவதில் உண்மை இல்லை. இந்த சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் சமூகத்தை பிரிக்காது.
சமத்துவ சமுதாயத்தை உருவாக்க, பல்வேறு சமூக மக்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்த வேண்டியது அவசியம். நமது சமூகம் பெரிய அளவில் சாதி அமைப்புடன் உள்ளது. ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வேண்டும். அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும். அதற்காக எங்களிடம் புள்ளி விவரங்கள் இருக்க வேண்டும். எனவே இந்த சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் தேவையான ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.