ஜெயலலிதா நிறுவனங்களின் சொத்து மதிப்பு அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம்; தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் நிறுவனங்களின் சொத்து மதிப்பு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கால அவகாசம் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும், மற்ற மூன்று பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய பொருட்களை ஏலம் விட உத்தரவிடக் கோரி பெங்களூருவை சேர்ந்த தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு நாங்கள் தான் வாரிசு என்று கூறி ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி நடந்த வழக்கு விசாரணையின் போது, சொத்து குவிப்பு வழக்கில் அபராதம் செலுத்த ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க-வைர நகைகளை ஏலம் விடவும், அதில் கிடைக்கும் ரூ.100 கோடியை அபராதமாக செலுத்தவும், மீதமுள்ள தொகையில் ரூ.5 கோடியை வழக்கு செலவாக கர்நாடக அரசுக்கும் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய நிறுவனங்களின் சொத்துக்களை மதிப்பிடவும் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்டு 31-ந்தேதிக்கு (அதாவது நேற்றைக்கு) தள்ளிவைத்தார்.
அதன்படி பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சிறப்பு வக்கீல் கிரண் ஜவளி ஆஜரானார். அப்போது ஜெ.தீபா சார்பில் ஆஜரான வக்கீல், ஒரு 'மெமோ' தாக்கல் செய்தார்.
அதில் இந்த கோா்ட்டு தங்களின் மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதால், அதன் மீது முடிவு எடுக்கப்படும் வரை இங்கு விசாரணை நடத்துவதை நிறுத்துமாறு கோரப்பட்டது. இதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.
தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்பான ஜெயலலிதா வின் சொத்து பட்டியலை தாக்கல் செய்தனர்மேலும் வழக்கு விசாரணையின் போது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார், சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் நிறுவனங்களின் சொத்துமதிப்பை கணக்கீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டனர். அதைத்தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை வருகிற அக்டோபர் மாதம் 6-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதாவது ஜெயலலிதா நிறுவனங்களின் சொத்து மதிப்பு அறிக்கை தாக்கல் செய்ய 36 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.