தாவூத் இப்ராகிம் நாடு கடத்தும் விவகாரம்... பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரி அளித்த பதில்

இந்திய பாதுகாப்பு முகமைகளால் தேடப்படும் தாவூத் இப்ராகிம், பயங்கரவாதி ஹபீஸ் சையத் ஆகியோரை நாடு கடத்துவது பற்றிய கேள்விக்கு பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு தலைமை அதிகாரி பதிலளிக்க மறுத்து விட்டார்.

Update: 2022-10-18 12:14 GMT



புதுடெல்லி,


டெல்லியில் இன்டர்போல் மாநாடு இன்று நடந்தது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு அமைப்பு (எப்.ஐ.ஏ.) தலைமை அதிகாரியான இயக்குனர் ஜெனரல் மோசின் பட் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அவரிடம் இந்திய பாதுகாப்பு முகமைகளால் தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பின்னணியாக இருந்து செயல்பட்ட முக்கிய பயங்கரவாதி ஹபீஸ் சையத் ஆகியோரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது.

பாகிஸ்தான், அவர்களை இந்தியாவிடம் ஒப்படைப்பது பற்றிய கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சமீப நாட்களாக பதற்ற சூழல் காணப்படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசும்போது, காஷ்மீர் விவகாரம் பற்றி பேசியதுடன், அதனை ரஷிய போருடன் ஒப்பிட்டும் கூறப்பட்டது. எனினும், இதற்கு அந்த கூட்டத்திலேயே இந்திய தரப்பில் பதிலடி தரப்பட்டது.

தொடர்ந்து எல்லை கடந்த பயங்கரவாதம் பற்றி இரு நாடுகளுக்கும் இடையே மோதலான போக்கு தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் பாகிஸ்தானிய குழுவினர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 4 நாட்கள் நடைபெறும் இந்த இன்டர்போல் மாநாடு வருகிற 21-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதில், 195 உறுப்பு நாடுகள் கலந்து கொள்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்