கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தேர்தல் வெற்றிக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.;

Update:2023-07-22 02:45 IST

பெங்களூரு:

கர்நாடக முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த சித்தராமையா உள்ளார். அவர் 2-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். சித்தராமையா மைசூரு மாவட்டத்தில் உள்ள தான் பிறந்த சொந்த தொகுதியான வருணாவில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வாகி உள்ளார். இந்த நிலையில் சித்தராமையா தேர்தலில் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி, மைசூருவை சேர்ந்த சங்கர் என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், இலவசங்கள் வழங்குவதாக கூறி வாக்குகளை சித்தராமையா சேகரித்தார். எனவே எம்.எல்.ஏ. வேட்பாளராக இருந்தபோது அவர் வாக்குறுதிகள் அளிப்பது தேர்தல் விதிமீறல் ஆகும். இலவச திட்டங்கள் மூலம் வாக்காளர்களை அவர் விலைக்கு வாங்கி உள்ளார்.

இது சட்டப்படி குற்றமாகும். எனவே அவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று சுனித் தத் என்ற தனிநீதிபதி அமர்வில் நடைபெற்றது. அப்போது நீதிபதி, இருதரப்பு வாதங்களையும் கேட்டார்.

பின்னர் நீதிபதி சுனித் தத் கூறுகையில், முதல்-மந்திரி சித்தராமையாவின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க தொடரப்பட்ட வழக்கில், பல்வேறு ஆட்சேபனைகள் உள்ளன. அவற்றை நீக்குமாறு மனுதாரரின் வக்கீலுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்