பணம் கொடுத்து மதம் மாற்ற முயற்சி.. மத்திய பிரதேசத்தில் 5 பேரை கைது செய்தது போலீஸ்

மதமாற்றம் செய்ய முயன்றதாக ராஜஸ்தானைச் சேர்ந்த தம்பதியர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2024-09-23 12:50 IST

குணா:

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமம் சர்சாஹேலா. இந்த கிராமத்தைச் சேர்ந்த சில இந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாக அதே ஊரைச் சேர்ந்த சரண்சிங் ஆதிவாசி என்பவர் தர்னாவாடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊரைச் சேர்ந்த இந்துக்கள் சிலரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்கான முயற்சி நடப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. உடனே இதுபற்றி ருதியாய் நகரில் உள்ள இந்து அமைப்புகளுக்கு தகவல் கொடுத்தேன்.

பின்னர் மதம் மாற்ற முயற்சி நடப்பதாக தகவல் கிடைக்கப்பெற்ற பாலமுகுத் ஆதிவாசி என்பவரின் வீட்டுக்கு சென்றோம். அங்கு ஒரு பாதிரியாரும் அவரது மனைவியும் சிலருக்கு பணம் கொடுத்ததுடன், கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காக ஜெபம் செய்துகொண்டிருந்தனர். சட்டவிரோதமாக மதம் மாற்ற முயன்ற அவர்கள் மீதும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

அவரது புகாரின் அடிப்படையில் ராஜஸ்தானைச் சேர்ந்த தம்பதியரான சஞ்சு சைமன் மற்றும் மஞ்சு சைமன், உள்ளூரைச் சேர்ந்த பாலமுகுத் ஆதிவாசி, சாவித்ரி பாய், பிங்கி சகாரியா ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது மதமாற்ற தடைச் சட்டம் மற்றும் எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்