கர்நாடகாவில் தொடரும் மழை: கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக தென்பண்ணை ஆற்றில் நீர் திறக்கப்பட்டு வருகிறது.;

Update:2022-09-07 10:59 IST

பெங்களூரு,

பெங்களூருவில் வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் 3-வது நாளாக மழை வெள்ளம் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போய் உள்ளது. வெள்ளம் தேங்கிய சாலைகளில் டிராக்டர்களில் மக்கள் பயணம் செய்கிறார்கள்.

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தலைநகா் பெங்களூரு உள்பட மாநிலத்தில் பல மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பெங்களூருவை கனமழை புரட்டிப்போட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கனமழை பெய்ய ஆரம்பித்தது.

இந்த மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. 3-வது நாளாக கனமழை பெய்ததால் பெங்களூரு நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. ஒரு சில பகுதிகளில் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகள் தீவுகள் போல் காட்சி அளிக்கின்றன

அடுக்குமாடி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் அந்த குடியிருப்புகளின் வளாகங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வெள்ளம் சூழ்ந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள் வெளியே வர முடியாத நிலை உள்ளது. அந்த வீடுகளில் வசித்து வந்தவர்களை மீட்பு படையினர் ரப்பர் படகுகள், டிராக்டர்கள், பரிசல்கள் மூலம் மீட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் தவிப்பவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள், டிராக்டர்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பெங்களூரு நகரில் தொடர்ந்து சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பெங்களூருவின் சர்ஜாப்புரா ரோட்டில் சாலையில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலை ஆறுபோல காட்சி அளிக்கிறது.

வெள்ளம் தேங்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்கள், கார்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் ஐ.டி. நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் வேலைக்கு செல்லவும், மாணவ-மாணவிகள் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லவும் டிராக்டர்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களில் பயணித்து செல்கிறார்கள்.

சுமார் 90 ஆண்டு கால வரலாற்றில் இப்படி மழை பெய்யவில்லை என கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை கூறியுள்ளார். தொடர்ந்து வெளுத்து வாங்கி வரும் மழையால் பெங்களூரு நகரம் மற்றும் புறநகர் பகுதி மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கி போய் உள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் தொடரும் மழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக தென்பண்ணை ஆற்றில் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் 2வது நாளாக தரைப்பாலத்தை வெள்ள நீர் மூழ்கடித்து செல்கிறது. மேலும் தட்டிக்கானப்பள்ளி, சித்தனப்பள்ளி உள்ளிட்ட 8 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்