இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் - மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் திரும்ப கொண்டுவரப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.;

Update:2022-11-09 17:24 IST

சிம்லா,

இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில், இமாச்சல பிரதேசத்தில் உள்ள பானுட்டியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,

இமாச்சால பிரதேச மக்கள் படித்தவர்கள், அவர்கள் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு பரிசீலித்து வாக்களிப்பார்கள். வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்ற பொய் வாக்குறுதிகளால் பாஜகவால் நாடு முழுவதும் உள்ள மக்களை ஏமாற்ற முடிந்திருக்கலாம். ஆனால் இங்கு அவ்வாறு செய்ய முடியாது.

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் திரும்ப கொண்டு வருவது தான் அரசின் முதல் முடிவாக இருக்கும். விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

நியாயமான வாக்குப்பதிவு முறையில் காங்கிரஸ் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன், ஆனால் ஜேபி நட்டா எப்படி நியமிக்கப்பட்டார் என்பது யாருக்கும் தெரியாது. காங்கிரசில் ஜனநாயகம் இல்லை என்று அவர்கள் (பாஜக) எப்போதும் குற்றம் சாட்டுகிறார்கள்.

கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்பது அவர்களுக்கு (பாஜக) பொதுவான முழக்கமாக உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஏற்கனவே கல்லூரிகள், மின்சாரம் மற்றும் சாலைகள் போன்ற பல வசதிகள் இருந்தன. அவை அனைத்தும் கடந்த 7 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டதா?

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க மண்டி இல்லை. அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கூட கிடைக்கவில்லை. இங்குள்ள விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் பழங்களை வாங்கி அதனை அதிக விலைக்கு விற்பவர்களை பாஜக மற்றும் முதல்வர் ஆதரிக்கின்றனர். உங்களுக்கு இப்படி ஒரு அரசு தேவையா?

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்படும் என்ற தகவல் எனக்கு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்