அதானி விவகாரம்: பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்

அதானி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-02-06 17:32 GMT

புதுடெல்லி,

அதானி குழுமம் பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக , அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த சூழலில் நாடாளுமன்ற இரு அவைகளும் 3 வது நாளாக இன்றும் முடங்கியது. 3 நாட்களாக அலுவல் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

முன்னதாக இன்று காலை நாடாளுன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "ஆளும் கட்சி இந்த விவகாரம் பற்றி விவாதிக்கக் கூடாது என நினைக்கிறது. அவர்கள் இதை எப்படியாவது தவிர்க்க விரும்புகிறார்கள். எங்கள் நோட்டீஸ் மீது விவாதம் நடத்த வேண்டுகிறோம். விரிவான விவாதத்திற்குத் தயாராக இருக்கிறோம். அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். ஜனாதிபதி உரையை முன்வைத்தும் விவாதிக்க ஆயத்தமாக உள்ளோம். அதற்கும் உரிய முக்கியத்துவம் அளிப்போம். ஆனால் அதானி குழும விவகாரத்துக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும். அதற்குத்தான் முன்னுரிமை" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்