காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி சேர்ந்தது மோசமான சுயநல அரசியல்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு

காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி சேர்ந்தது மோசமான சுயநல அரசியல் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-07-21 16:41 GMT

மண்டியா:

சுயநல அரசியல்

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டையில் இன்று மாநில அரசின் வளர்ச்சி பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த 2018-19-ம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. இது மிக மோசமான சுயநல அரசியல் ஆகும். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் சமரசம் செய்து கொள்ளப்பட்டது. இது அதிகாரத்தை கைப்பற்றும் அரசியல் ஆகும். அதன் காரணமாக தான் நாராயணகவுடா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார்.

இலவச மின்சாரம்

அவர் அளித்த வாக்குறுதிப்படி இந்த தொகுதிக்கு ரூ.17 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி பணிகளை கொண்டு வந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு மத்தியில் எடியூரப்பா முதல்-மந்திரி ஆனார். அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொரோனாவுக்கு எதிராக போராடினார். இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனா பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது.

இதை மக்களை மையப்படுத்திய அரசியல் என்று அழைக்கிறார்கள். ஆதிதிராவிடர்கள், ஏழை மக்களின் மேம்பாட்டிற்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையை எடியூரப்பா உயர்த்தினார். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது. விவசாயிகளின் பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்