காங்கிரஸ் மிகவும் பொறுப்பற்ற எதிர்க்கட்சி; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விமர்சனம்

காங்கிரஸ் மிகவும் பொறுப்பற்ற எதிர்க்கட்சி என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2023-02-19 18:45 GMT

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பாதிப்பு ஏற்படாது

எனது தலைமையிலான பா.ஜனதா நரகத்தை உருவாக்குவதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார். அவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டி பூசலை சரி செய்யட்டும். அவருக்கு கர்நாடகம் பற்றி என்ன தெரியும்?. முந்தைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நரகத்தை உருவாக்கியதால் தான் அக்கட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பினர். காங்கிரஸ் மிகவும் பொறுப்பற்ற எதிர்க்கட்சி. விமர்சிப்பது என்பது வேறு. ஆனால் எங்கள் அரசு மீது இவ்வாறு பொறுப்பற்ற முறையில் கூறும் கருத்துக்களால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

மக்களுக்கு அசுரர்கள் யார், தேவதைகள் யார் என்பது தெரியும். 70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்து அசுரர்கள் யார் என்பதை காட்டியுள்ளனர். காங்கிரசில் அசுரர்களின் பட்டியல் பெரியதாகவே உள்ளது. தேர்தலில் மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆகாயத்தை காட்டி ஏமாற்ற முயற்சி செய்கிறார்கள்.

காப்பி அடிக்கவில்லை

ஆனால் நாங்கள் உண்மையில் என்ன செய்ய முடியுமோ அதை தான் மக்களுக்கு நம்பிக்கையாக கூறுகிறோம். காங்கிரசின் திட்டத்தை நாங்கள் காப்பி அடிக்கவில்லை. கடந்த 2022-23-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த தலைமை செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இத்தனை நாட்களாக காங்கிரசார் மக்களின் காதில் பூ சுற்றினர்.

இப்போது அவர்களே தங்களின் காதில் பூ சுற்ற தொடங்கியுள்ளனர். வரும் நாட்களில் அவர்களின் காதில் மக்கள் பூ சுற்றுவார்கள். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடினால் பா.ஜனதாவை வெல்ல முடியும் என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாா் கூறியுள்ளார். அவர் இதுவரை எத்தனை முறை தனது நிறத்தை மாற்றியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் அவரது கருத்துக்கு பதிலளிக்க வேண்டியது இல்லை. ஊடக அகாடமியில் வட கர்நாடக பத்திரிகையாளர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்