மக்களின் விருப்பத்திற்கு எதிரான திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்காது - ராகுல்காந்தி உறுதி

மக்களின் விருப்பத்திற்கு எதிரான திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்காது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-14 00:10 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் 3-வது நாள் பாதயாத்திரையை காலையில் மாமம் பகுதியில் ராகுல்காந்தி முடித்தார். பின்னர் அவர் எஸ்.எஸ்.பூஜா கன்வென்சன் சென்டரில் மதிய உணவுக்கு பிறகு பிற்பகல் 2 மணிக்கு கிராம வேலைவாய்ப்பு உறுதி திட்ட பெண் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது 100 நாட்கள் வேலை கிடைப்பது இல்லை. இதனால் நிரந்தரமாக வருமானம் கிடைப்பதில்லை என தொழிலாளர்கள் அவரிடம் குற்றம்சாட்டினர்.

பின்னர் ராகுல்காந்தி கூறுகையில், "கிராம வேலை வாய்ப்பு உறுதி திட்டம் தீட்டப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்த திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் அனைவருக்கும் நிலையான வருமானம் உறுதி செய்யப்படும்" என்றார்.

கேரளாவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அதிவேக ரெயில் பாதை திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் போராட்ட குழு தலைவர் பாபுராஜ் தலைமையில் அந்த குழுவினர் ராகுல்காந்தி எம்.பி-யை சந்தித்து தங்களது கோரிக்கைகளை சமர்ப்பித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு ராகுல்காந்தி கூறுகையில்," மக்களின் விருப்பத்திற்கு எதிரான எந்த திட்டத்திற்கும் காங்கிரஸ் கட்சி துணை நிற்காது. இந்த திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்ட குழுவினருடன் இணைந்து தொடர்ந்து போராடுவார்கள்" என்றார்.

இரவு 7 மணிக்கு கல்லம்பலத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரையை முடித்தார். அப்போது அவர் திரளான தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-

பா.ஜ.க. நமது நாட்டில் மக்களிடையே அதாதாரண சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. நாட்டில் அமைதி, சமத்துவ சூழ்நிலை ஏற்பட வேண்டும். மக்கள் ஒரு வகையான பீதியில் வாழ்ந்து வருகிறார்கள். குழந்தைகளின் கல்வி, மருத்துவ வசதி மேம்பாடு, வறுமை ஆகியவற்றை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

எனது பயணம் சாந்தி, சமாதானம், ஒற்றுமைக்கான பயணம். இந்து என்பதில் மிகவும் சிறந்தது 'ஓம் சாந்தி' என்பதாகும். இதில் நம்பிக்கை கொண்ட ஒரு கட்சிக்கு பிரிவினையை ஏற்படுத்தும் மனோபாவம் எங்கிருந்து வந்தது அனைத்து மதங்களின் தத்துவம் சாந்தி, சமாதானத்தில் அடங்கி விடுகிறது. நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்களது பாரம்பரியம் தொடரட்டும். அதுதான் இந்த நாட்டிற்கு தேவை. பிரிவினையை ஏற்படுத்தும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு சக்தியையும் அனுமதிக்காதீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்