உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த பணம், மதுபான பாட்டில்கள் பறிமுதல்

சிக்கமகளூருவில் ஒரேநாளில் 3 இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பணம் மற்றும் மதுபான பாட்டில்களை போலீசாரும், பறக்கும் படையினரும் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-04-22 18:45 GMT

சிக்கமகளூரு:-

சட்டசபை தேர்தல்

கர்நாடகத்தில் வருகிற 10-ந் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம், பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்க போலீசாரும், பறக்கும் படையினரும், தேர்தல் அதிகாரிகளும் தீவிர வாகன சோதனை உள்பட பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுபோல் சிக்கமகளூஉரு மாவட்டம் கடூரில் அமைக்கப்பட்டு இருக்கும் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவில் போலீசாரும், பறக்கும் படையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் வந்த பயணிகளிடம் போலீசாரும், பறக்கும் படையினரும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பயணியிடம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் ரொக்கம் இருந்தது. ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து போலீசாரும், பறக்கும் படையினரும் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

மதுபான பாட்டில்கள்

மேலும் இதுபற்றி கடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதுபோல் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா லக்குவள்ளி அருகே எம்.என்.கேம் பகுதியில் ஒரு காரில் வந்தவரிடம் இருந்து ரூ.70 ஆயிரத்தை லக்குவள்ளி போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மூடிகெரே தாலுகா அலசே கிராமத்தில் ஒரு காரில் வந்தவரிடம் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து முறையே லக்குவள்ளி மற்றும் மூடிகெரே புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்