பெரியப்பா வீட்டில் திருடிய கல்லூரி மாணவி, காதலனுடன் கைது; உல்லாசமாக சுற்றித்திரிய கைவரிசை

பெங்களூருவில் பெரியப்பா வீட்டில் திருடியதாக கல்லூரி மாணவி, அவரது காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-07-24 16:43 GMT

பெங்களூரு:

காதல் ஜோடி கைது

பெங்களூரு பீனியா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நபர் வசித்து வருகிறார். அவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்க நகைகள், பணம் மர்மநபர்களால் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து பீனியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அந்த நபர் வீட்டில் திருடியதாக காதல் ஜோடியை கைது செய்துள்ளனர்.

விசாரணையில், அவர்கள் பெயர் மது (வயது 19), இவருடைய காதலி தீக்சிதா (19) என்று தெரிந்தது. இவர்களில் மது மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். தீக்சிதா தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் காதலித்து வருகின்றனர். உல்லாசமாக சுற்றித்திரிய 2 பேருக்கும் பணம் தேவைப்பட்டுள்ளது. தனது பெரியப்பா வீட்டில் ஏராளமான நகை, பணம் இருப்பது பற்றி தீக்சிதாவுக்கு தெரிந்தது.

பெரியப்பா வீட்டில் திருட்டு

இதையடுத்து, அந்த பெரியப்பா வீட்டில் திருடும்படி காதலன் மதுவுக்கு தீக்சிதா கூறியுள்ளார். இதற்காக தனது பெரியப்பா, அவரது குடும்பத்தை ஏமாற்றுவதற்காக, பெரியப்பா வீட்டின் வாகனம் நிறுத்தும் பகுதியில் மாந்தீரிக பொருட்களை தீக்சிதா போட்டுள்ளார். இதனால் அந்த பொருட்களை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து வாகனம் நிறுத்தும் பகுதியில் நின்று பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்த மது, அங்கிருந்த ரூ.90 ஆயிரம், 200 கிராம் தங்க நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

கைதான 2 பேரிடம் இருந்து ரூ.30 ஆயிரம், 200 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது பீனியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரை ணநடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்