கர்நாடகத்தில் 9-ம் வகுப்பு, பி.யூ.சி. முதலாம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு
கர்நாடகத்தில் 9-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. முதலாம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், இந்த ஆண்டிலேயே இது அமலுக்கு வரும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.;
பெங்களூரு:
கர்நாடகத்தில் 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கர்நாடகத்தில் 9-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. முதலாம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது இந்த கல்வி ஆண்டிலேயே அமலுக்கு வருவதாகவும் பள்ளி கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் 9-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டு இறுதியில் நடத்தப்படும் தேர்வை பள்ளி கல்வித்துறை மூலமாகவே பொதுத்தேர்வாக நடத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
9-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே நடத்தப்பட உள்ளது. 9-ம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வுகளில் அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்களே மேற்பார்வையாளராகவும், பி.யூ.சி. முதலாம் ஆண்டுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வுகளுக்கு கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மேற்பார்யைாளராக நியமிக்கப்படுவார்கள் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் 9-ம் வகுப்பு மாணவர்களின் வினாத்தாள்கள் தாலுகா மட்டத்தில் திருத்தப்படும் என்றும், யாரையும் தோல்வி அடைய செய்யப்படாது என்றும், மாணவர் மற்றும் பெற்றோருக்கு மட்டுமே மதிப்பெண் பற்றிய விவரம் தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.