பெண்ணின் 'உள்ளாடை திருட்டு' விவகார கோஷ்டி மோதலில் 10 பேர் காயம்
பெண்ணின் ‘உள்ளாடை திருட்டு’ விவகார கோஷ்டி மோதல் சம்பவத்தில் இரு தரப்பிலும் 10 பேர் காயமடைந்தனர்.;
பெண்ணின் உள்ளாடை திருட்டு விவகாரம், கோஷ்டி மோதலாக மாறி மண்டை உடைப்பு வரை போயிருக்கிறது.இந்த சம்பவம் நடந்தது, குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள பச்சாம் என்ற கிராமத்தில்.
உள்ளாடை திருட்டு
அங்கு வசிக்கும் ஒரு 30 வயது பெண், மொட்டை மாடியில் காயப்போடும் தனது உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போனதால் திகைத்து வந்தார். ஒரு நாள், இரு நாளல்ல... கடந்த 8 மாதங்களாக இந்த உள்ளாடைத் திருட்டு நடந்துவந்திருக்கிறது. வெறுத்துப்போன அந்தப் பெண், தானே ஒரு ரகசிய கேமரா நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தார். தனது செல்போன் வீடியோவை 'ஆன்' செய்து மாடியில் ரகசியமாக மறைத்துவைத்தார். பின்னர் அவர் அதை எடுத்து பார்த்தபோது, காயப்போட்ட உள்ளாடைகளை உருவிச் சென்றது பக்கத்து வீட்டுக்காரர்தான் என தெரியவந்தது.
மலை போல் உள்ளாடைகள்
மறுநாள் தானே மறைந்திருந்து கண்காணித்த அந்தப் பெண், உள்ளாடைகளை பக்கத்து வீட்டுக்காரர் திருடுவதை நேரில் கண்டார். அந்த நபரை பின்தொடர்ந்து அவரது வீட்டுக்குள் சென்று பார்த்த அந்தப் பெண், அதிர்ந்தார். அங்கு மலை போல அவரது உள்ளாடைகளை அந்த ஆசாமி குவித்து வைத்திருந்தார்.
நையப் புடைத்தனர்
அதுகுறித்து அந்த நபரிடம் அப்பெண் விசாரித்தார். தனது குட்டு உடைபட்டதால் கோபமடைந்த அவர், அந்தப் பெண்ணை தாக்கினார். அவரை மானபங்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் அழுகுரல் கேட்டு அங்கு வந்த அவரது குடும்பத்தினர், பக்கத்து வீட்டுக்காரரையும், தட்டிக் கேட்ட அவரது குடும்பத்தினரையும் தடிகளால் நையப் புடைத்தனர்.
எதிர்த்தாக்குதல்
சிறிது நேரம் கழித்து சுதாரித்த உள்ளாடை திருட்டு பேர்வழியின் உறவினர்கள், உள்ளாடைகளை இழந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது எதிர்த்தாக்குதல் தொடுத்தனர்.
கோஷ்டி மோதலாக மாறிய இந்த சம்பவத்தில் இரு தரப்பிலும் 10 பேர் காயமடைந்தனர். சிலருக்கு மண்டை உடைந்தது. பரஸ்பர புகாரின் பேரில், இரு தரப்பிலும் 20 பேரை கைது செய்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.