ஆசிரியர் நியமன முறைகேடு குறித்து சி.ஐ.டி. விசாரணை சட்டசபையில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் தகவல்

ஆசிரியர் நியமனம் முறைகேடு குறித்து சி.ஐ.டி விசாரணை நடைபெறும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி நாகேஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-20 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக மேல்-சபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் ஆளும் பா.ஜனதா உறுப்பினர் ராஜீவ், கடந்த 2016-ம் ஆண்டு ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரினார். அதற்கு பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பதிலளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஆசிரியர்கள் தகுதி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டனர். அப்போது பலர் அந்த தேர்வை எழுதாமலேயே ஆசிரியர் பணியை பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். அதில் பெங்களூரு மண்டலத்தில் மட்டும் 16 பேர் தகுதி தேர்வு எழுதாமல், விண்ணப்பிக்காமல் நேடியாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து இதுகுறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த விசாரணை நடைபெற்று வருகிறது. முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.ஐ.டி. விசாரணையில் மாநிலம் முழுவதும் எத்தனை பேர் முறைகேடுகள் மூலம் ஆசிரியர் பணியில் சேர்ந்தனர் என்பது தெரியவரும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து, தராளமாக விசாரணை நடத்துங்கள் என்று கூறினர். இந்த விஷயத்தில் மாநில அரசு உள்நோக்கத்துடன் செயல்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்