டோக்லாம் எல்லையில் சீன கட்டுமானம் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் - காங்கிரஸ்

டோக்லாம் எல்லையில் சீன கட்டுமானம் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Update: 2023-04-12 13:20 GMT

டெல்லி,

இந்தியா - சீனா - பூட்டான் ஆகிய நாடுகளின் எல்லைகளை பிரிக்கும் மையமாக டோக்லாம் பகுதி உள்ளது. டோக்லாம் பீடபூமி பூட்டானில் உள்ளது. இந்த பகுதி இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கும் சீனாவின் ஷும்பி பள்ளத்தாக்கிற்கும், பூட்டானின் ஹா மாவட்டத்திற்கும் மையப்பகுதியில் உள்ளது.

இந்தியா - சீனா இடையேயான எல்லை பகுதியான டோக்லாமில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த பகுதியில் இரு நாட்டு வீரர்களும் படைகளை குவித்து வைத்துள்ளனர்.

லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் 2020-ம் ஆண்டு இந்தியா - சீன படைகள் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர். சீன தரப்பிலும் சில வீரர்கள் உயிரிழந்தனர். இந்த மோதலுக்கு பின் இரு நாட்டு எல்லையிலும் படைகள் குவிக்கப்பட்டதால் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

அந்த வகையில் டோக்லாம் பகுதியில் சீனா படைகளை குவித்து வருகிறது. மேலும், அந்த பகுதியில் பல்வேறு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வரும் சீனா கட்டிடங்களை கட்டி வருகிறது. டோக்லாம் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் உள்கட்டமைப்பு குறித்து சமீபத்தில் புகைப்படங்கள் வெளியாகின.

இந்நிலையில், டோக்லாம் எல்லையில் சீன கட்டுமானம் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், டோக்லாமில் சீன கட்டமைப்புகள் இந்திய பாதுகாப்பிற்கு மிகப்பெரிய தெளிவான அச்சுறுத்தல். எல்லையில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பழைய நிலையை மீண்டும் கொண்டுவருவதில் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டது.

பிரதமர் மோடியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு தவறான கருத்துக்களை கூறுவதற்கு பதில் உள்துறை மந்திரி அமித்ஷா எல்லையில் உண்மையான கட்டுப்பாட்டு பகுதியில் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்