சிக்கமகளூரு மருத்துவ கல்லூரி இன்று முதல் செயல்படும்
சிக்கமகளூரு மருத்துவ கல்லூரியில் இன்று (திங்கட்கிழமை) முதல் மாணவ-மாணவிகளுக்கு பாடம் எடுக்கப்படும் கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு:-
இன்று முதல்...
சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ், தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சிக்கமகளூரு அருகே கதிரிமிதிரி பகுதியில் ரூ.350 கோடி செலவில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. ஓராண்டாக வேலைகள் நடந்து வருகிறது. சுமார் 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன. தற்போது மத்திய அரசு, இந்த மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதுவரை 150 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 80 சதவீதம் மாணவ-மாணவிகள் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள். 20 சதவீதம் பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். நாளை (திங்கட்கிழமை) முதல் மருத்துவ கல்லூரி செயல்பட தொடங்கும். மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்த 80 பேராசியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரி
சிக்கமகளூரு மற்றும் சக்கராயப்பட்டணாவில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிக்கமகளூரு மதுவனஹள்ளியில் உள்ள விஸ்வ வித்யாலயா கல்லூரியில் மாணவர்களுக்கு தற்காலிகமாக பாடம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் புதிய மருத்துவ கல்லூரி கட்டிடத்தில் மாணவ-மாணவிகளுக்கு பாடம் எடுக்கப்படும்.
சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியை நவீன முறையில் மேம்படுத்தவும், உயர் பன்னோக்கு மருத்துவமனைக்காக மாற்றவும் மாநில அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது.