கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தவறிவிட்டார்; சித்தராமையா குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தவறிவிட்டார் என்று சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2022-12-17 18:45 GMT

மங்களூரு:

சட்டம்-ஒழுங்கை...

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் வந்தார். மங்களூரு விமான நிலையத்தில் வைத்து சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தாா். அப்போது அவர் கூறியதாவது:-

தட்சிண கன்னடா மாவட்டத்தில் சட்டத்தை கையில் எடுத்து சிலர் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. இதுபற்றி முதல்-மந்திரி நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற முதல்-மந்திரிக்கு தெரியவில்லை. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தான் காரணம். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அவர் தவறிவிட்டார்.

தவறு இல்லை

பயங்கரவாத செயல்களுக்கு டி.கே.சிவக்குமார் ஆதரவாக பேசி உள்ளதாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டுகிறார்கள். அவர் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக பேசவில்லை. தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக தான் பா.ஜனதாவினர் மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தை பா.ஜனதாவினர் கையில் எடுத்துள்ளனர் என்று தான் பேசினார். அதில் தவறு இல்லை. பா.ஜனதாவினர் மக்களை திசை திருப்ப தான் பயங்கரவாதம் பற்றி பேசி வருகிறார்கள்.

நாட்டில் 9 ஆண்டுகளாக பா.ஜனதா தான் ஆட்சியில் உள்ளது. அவர்கள் பயங்கரவாதத்தை தடுக்க வேண்டும். அதை விட்டு தேவையில்லாமல் எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்