சந்திரயான்-3 விண்கலத்தின் 'உந்துவிசை தொகுதி' பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் - இஸ்ரோ தகவல்
உந்துவிசை தொகுதியை பயன்படுத்தி எதிர்கால நிலவு பயணங்களுக்கான தகவல்களைப் பெற இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.;
பெங்களூரு,
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 'சந்திரயான்-3' விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த ஜூலை 14-ந்தேதி விண்ணில் ஏவியது.
தொடர்ந்து ஆகஸ்ட் 23-ந்தேதி 'விக்ரம்' லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகே வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து 'பிரக்யான்' ரோவர் மூலம் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தின் 'புரபல்ஷன் மாட்யூல்' எனப்படும் உந்துவிசை தொகுதி, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை ஒரு தனித்துவமான சோதனை என இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தொகுதியை நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு கொண்டு சென்று லேண்டரை வெற்றிகரமாக பிரிப்பதே உந்துவிசை தொகுதியின் முக்கிய நோக்கமாகும். இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தின் இலக்குகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், உந்துவிசை தொகுதியை பயன்படுத்தி எதிர்கால நிலவு பயணங்களுக்கான தகவல்களைப் பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.