லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பான டிஆர்எப் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு
லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பான டிஆர்எப் பயங்கரவாத அமைப்பாக உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
புதுடெல்லி
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பான டிஆர்எப் எனப்படும் எதிர்ப்பின் முன்னணியை உள்துறை அமைச்சகம் ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த அமைப்பை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (உபா) கீழ் பயங்கரவாத அமைப்பாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.டிஆர்எப் 2019 இல் தொடங்கப்பட்டது.
பயங்கரவாத நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ஆன்லைன் ஊடகம் மூலம் இளைஞர்களை இந்த அமைப்பு சேர்த்து வருகிறது.பயங்கரவாத நடவடிக்கைகள், பயங்கரவாதிகளின் ஆட்சேர்ப்பு, பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜம்மு-காஷ்மீர் மக்களை இந்திய அரசுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளில் சேர தூண்டுவதற்காக சமூக ஊடக தளங்களில் உளவியல் நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது என கூறப்பட்டு உள்ளது.
டிஆர்எப் தலைவர் ஷேக் சஜ்ஜத் குல் உபா சட்டத்தின் இன் கீழ் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் ஆவார்.