உணவு விற்பனை பிரதிநிதியின் செல்போனை பறித்து சென்ற கொள்ளையர்கள்: 10 கி.மீ. தூரம் விரட்டி சென்றும் பிடிபடவில்லை

சாப்பாடு கிடைக்காத கோபத்தில், உணவு விற்பனை பிரதிநிதிகளை கம்பியால் தாக்கிவிட்டு கொள்ளையர்கள் செல்போனை பறித்து சென்ற சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது.

Update: 2022-05-19 21:42 GMT

பெங்களூரு: சாப்பாடு கிடைக்காத கோபத்தில், உணவு விற்பனை பிரதிநிதிகளை கம்பியால் தாக்கிவிட்டு கொள்ளையர்கள் செல்போனை பறித்து சென்ற சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது.

சாப்பாடு கிடைக்காததால் கோபம்

பெங்களூருவை சேர்ந்தவர்கள் ரூபல் உசேன் (வயது 25), அப்துல் உசேன் (24). இவர்கள் 2 பேரும் உணவு விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் எம்.எஸ்.ராமய்யா நகரில் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஓட்டல் வெளியே ஆர்டருக்காக ரூபலும், அப்துலும் காத்து நின்று கொண்டு இருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் ஓட்டலுக்குள் சென்று சாப்பிட சென்றுள்ளனர்.

ஆனால் ஓட்டலில் அமர்ந்து சாப்பிட உணவு இல்லை என்றும், ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும்படியும் ஓட்டல் ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் கோபத்தில் வெளியே வந்த 2 பேரும், அங்கு நின்ற ரூபல், அப்துலிடம் சாப்பாடு கேட்டு உள்ளனர். அப்போது அவர்கள், தங்களிடம் சாப்பாடு பார்சல் இல்லை என்று கூறியுள்ளனர்.

தப்பி ஓட்டம்

மேலும் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து ரூபல், அப்துலை இரும்பு கம்பியால் தாக்கினர். பின்னர் ரூபலிடம் இருந்து ரூ.1,000, அப்துலிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துவிட்டு 2 பேரும் ஆட்டோவில் தப்பி சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரூபலும், அப்துலும் மோட்டார் சைக்கிளில் அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். அவர்கள் 2 பேரையும் ஆட்டோவில் சென்ற 2 பேரும் கம்பியால் தாக்க முயன்று உள்ளனர். ஆனாலும் ரூபலும், அப்துலும் ஆட்டோவை விரட்டி சென்றனர். இதற்கிடையே சம்பவம் குறித்து ஓட்டல் ஊழியர்கள் ஒய்சாலா போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

பிடிக்க முடியவில்லை

அவர்களும் ஆட்டோவை விரட்டி சென்றனர். இந்த நிலையில் 10 கிலோ மீட்டர் தூரத்தில் அம்ருதஹள்ளி பகுதியில் ஆட்டோ சென்ற போது கியாஸ் தீர்ந்ததால் 2 பேரும் ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அப்போது அங்கு சென்ற ஒய்சாலா போலீசார் அந்த ஆட்டோவை பறிமுதல் செய்தனர். ஆனால் அந்த ஆட்டோவின் பதிவெண் போலியானது என்பது தெரியவந்து உள்ளது. 10 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்றும் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.

இந்த கொள்ளை சம்பவம் குறித்த புகாரின்பேரில் யஷ்வந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்கள் 2 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்