பா.ஜனதாவின் பாவங்களை தீர்க்க காவிரி-கிருஷ்ணா நீர் போதாது

நீரோ மன்னன் போல் பிரதமர் மோடியின் செயல்பாடு இருப்பதாகவும், பா.ஜனதாவின் பாவங்களை தீர்க்க காவிரி-கிருஷ்ணா நதிகளின் நீர் போதாது எனவும் சித்தராமையா கடுமையாக சாடியுள்ளார்.

Update: 2023-05-06 21:59 GMT

பெங்களூரு:-

சித்தராமையா கருத்து

பல்லாரியில் நேற்று முன்தினம் நடந்த பா.ஜனதா பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, பொய்கள் நிறைந்தது. சுதந்திரத்திற்கு பிறகு அரசியல் அமைப்பை சீரழித்த கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது என கடுமையாக தாக்கியிருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வாக்குறுதிகள் பற்றி விவாதிக்க தயாரா?

போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு ஆதரவை பெற காங்கிரஸ் கட்சி முயற்சி செய்வதாக பிரதமர் மோடி ஆவேசப்படுவது பரிதாபமாக உள்ளது. உங்களை புகழ்ந்து பாடும் ஊடகங்களின் நம்பகத்தன்மையை நீங்கள் சந்தேகிக்கிறீர்களா?. பா.ஜனதா அரசு கடந்த 2018-ம் ஆண்டு கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றவில்லை. 2013-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் நாங்கள் 165 அறிவிப்புகளை வெளியிட்டோம்.

இதில் 158 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். உங்களுக்கு தைரியம் இருந்தால் கடந்த 2013-ம் ஆண்டு எங்கள் வாக்குறுதிகள் பற்றியும், 2018-ம் ஆண்டு பா.ஜனதா வாக்குறுதிகள் பற்றியும் என்னுடன் நேருக்குநேர் விவாதிக்க தயாரா?. அதற்கான நேரம், இடத்தை நீங்கள் கூறுங்கள். உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன். பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் அரசு கடந்த 3½ ஆண்டு கால ஆட்சி, முந்தைய ஆட்சியின் தவறை திருத்தியதாக பிரதமர் மோடி கூறுகிறார்.

3 என்ஜின் அரசு

அந்த காலக்கட்டத்தில் உங்களின் இரட்டை என்ஜின் அரசு ஊழல், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வகுப்புவாத வெறுப்பு போன்ற சாதனைகளை இரட்டிப்பாக்கி உள்ளது. பா.ஜனதா செய்த பாவங்களை காவிரி, கிருஷ்ணா நதி நீர் போதாது. கர்நாடகத்தில் இருப்பது இரட்டை என்ஜின் அரசு அல்ல. 3 என்ஜின் அரசு. ஒன்று கர்நாடகத்திலும், இரண்டாவது டெல்லியிலும், 3-வது என்ஜின் நாக்பூரிலும் உள்ளது.

பிரதமர், முதல்-மந்திரி, மந்திரிகள் வரை அனைவரும் நாக்பூர் பொம்மைகளின் கைப்பொம்மைகள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்திட்டம் கொண்ட கட்சி, பா.ஜனதா. கன்னடர்களுக்கு மத்திய பா.ஜனதா அரசு செய்து வரும் அநீதியை வார்த்தைகளால் மூடி மறைக்க முடியாது.

நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல்...

நீங்கள் கன்னட கொடிக்கு அனுமதி கொடுக்கவில்லை. பயங்கரவாதத்தை துணிச்சலுடன் எதிர்கொண்டு உயிர்தியாகம் செய்த 2 பிரதமர்களும் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்று உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள்.

கடந்த சில நாட்களாக மணிப்பூர் பற்றி எரிந்து வருகிறது. நாட்டின் பிரதமரும், உள்துறை மந்திரியும் கர்நாடகத்தில் பிரசாரம் செய்து வருகிறார்கள். நீரோ மன்னன் ரோம் பற்றி எரியும் போது பிடில் வாசித்தது போல் உங்களின் செயல்பாடு உள்ளது. சீன எல்லை அத்துமீறலை தடுக்க முடியவில்லை. பயங்கரவாதத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. காங்கிரஸ் கட்சியை பற்றி பிரதமர் மோடி பேச தகுதி இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்