வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.-மகன் மீது வழக்குப்பதிவு

வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. சாமனூர் சிவசங்கரப்பா, அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-03-30 18:45 GMT

சிக்கமகளூரு:

சட்டசபை தேர்தல்

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

இதனை தடுக்க கர்நாடகம் முழுவதும் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லும் நகை, பணம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

பரிசு பொருட்கள்

அதேபோல் தாவணகெரே மாவட்டத்திலும் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தாவணகெரே தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் சாமனூர் சிவசங்கரப்பாவும், வடக்கு தொகுதியில் அவரது மகன் மல்லிகார்ஜுனும் போட்டியிட உள்ளனர். சாமனூர் சிவசங்கரப்பா தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

இந்தநிலையில் யுகாதி பண்டிகையையொட்டி சாமனூர் சிவசங்கரப்பா எம்.எல்.ஏ. மற்றும் அவரது மகன் உருவப்படம் அச்சிடப்பட்ட பைகளில் அப்பகுதி பொதுமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கப்பட்டது. அதில் சேலை மற்றும் சமையல் பொருட்கள் இருந்தன. இதை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வாங்கி உள்ளனர். ஆனால் பாஷா நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் பரிசு பொருட்களை சாலையோரம் வீசி உள்ளனர். மேலும் பெண்கள் சேலைகளை தீவைத்து எரித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வழக்குப்பதிவு

இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கூறுகையில், சாமனூர் சிவசங்கரப்பா எம்.எல்.ஏ.வாக தேர்வாகி 5 ஆண்டுகள் ஆகியும் எங்கள் பகுதிக்கு இதுவரை எந்த நலத்திட்ட உதவிகளையும் செய்யவில்லை. குடிநீர், சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. இதனால் நாங்கள் அவர் கொடுத்த பரிசு பொருட்களை சாலையில் வீசி எறிந்துள்ளோம் என்றனர்.

பொதுமக்கள் பரிசு பொருட்களை சாலையில் வீசி எறிவதும், சேலைகளை தீயிட்டு எரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து தாவணகெரே படாவனே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சாமனூர் சிவசங்கரப்பா எம்.எல்.ஏ., அவரது மகன் மல்லிகார்ஜுன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்