பேனா நினைவுச்சின்னத்தை எதிர்த்து வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 14-ந்தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு

பேனா நினைவுச்சின்னத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை 14-ந்தேதிக்கு தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2023-07-04 06:26 IST

புதுடெல்லி,


ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர் நல்லதம்பி, ராயபுரத்தைச் சேர்ந்த மீனவர் தங்கம், நாகர்கோவிலை சேர்ந்த மீனவர் மோகன் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், 'மெரினா கடற்கரையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பேனா நினைவு சின்னத்தால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். தமிழக அரசின் இந்தத் திட்டம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணாக உள்ளது. 32 மீனவ கிராமங்களை சேர்ந்த 4 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

இந்த திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை. எனவே பேனா நினைவுச்சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையை தள்ளி வைக்கக்கோரி மனுதாரர் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், 'தமிழக பண்பாட்டிற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. அது தொடர்பான உத்தரவுகளையும், ஆவணங்களையும் சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும்' என வாதிட்டார்.

இதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பான விசாரணையை 14-ந்தேதிக்கு தள்ளி வைத்ததுடன், விசாரணையை மீண்டும் தள்ளிவைக்க கோரக்கூடாது என்றும் தெளிவுபடுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்